தன்னுடைய ஆட்சியின் கீழ் இந்நாட்டின் அரசியல் துறையை சுத்தமாக்க நடவடிக்கை எடுப்பதாக மக்கள் தேசிய சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை தோல்வியடைய செய்ய வேண்டும் எனவும், அவர் 2015 ஆம் ஆண்டில் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இப்போது அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் களத்தை சுத்தம் செய்யாமல் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கும் இங்கும் தாவினால் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுவதற்கான சட்டத்தை கொண்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான நிலமையை கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 வயதிற்கு அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதவாறும் குற்றங்கள் தொடர்பில் வழக்கு இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதவாறும் சட்டத்தை கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.