இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடற்படையினர் தமது சித்திரவதைகளை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பல முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றிக்கதையாக 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம் அமைந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா ஆனால் இது தோல்வியின் அடையாளமாக மாறிவிட்டது என குறிப்;பிட்டுள்ளார்.
கடற்படையின் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளையும் திருகோணமலை முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளையும் இன்னமும் விசாரணை செய்யவில்லை,குற்றவாளிகள் பாதுகாக்க படுகின்றனர் அவர்களிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளுத பாதிக்கப்பட்டவர்களில் உயிருடன் உள்ளவர்கள் இன்னமும் விசாரணை செய்யபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையின் தளபதியாகயிருந்தவர் கடற்படையின் புலனாய்வு பிரிவிற்குள் விசேட பிரிவொன்றை உருவாக்கியது கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு தெரிந்திருக்கவேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விசேட பிரிவை சேர்ந்தவர்கள் நாட்டின் மிகவும் பாதுகாப்பான கடற்படை தளத்தில் நிலத்தடி இரகசிய சித்திரவதை கூடத்தை இயக்கினார்கள் இங்கு பெருமளவு சிறைக்கைதிகள் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்,இந்த சித்திரவதை கூடத்திலிருந்து எவரையும் வெளியே கொண்டுவரமுடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக இரகசிய சித்திரவதை கூடங்களில் பலரை கடற்படையின் தலைமைக்கு தெரியாமல் வைத்திருக்க முடியாதுஎனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் உரையாடிய கடற்படை அதிகாரிகள் அந்த முகாம்களில் என்ன நடக்கின்றது என்பதை தாங்கள் கண்டும்காணாமல் இருக்கவேண்டும் என்பது தங்களிற்கு தெரிந்திருந்தது என தெரிவித்தனர் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
கடற்படையின் முழு கட்டளைப்பீடமும் இதில் தொடர்புபட்டிருந்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படை காவல்துறையினரின் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வரை, குற்றவாளிகளிற்கு பதவி உயர்வு வழங்கும்வரை இலங்கை கடற்படை மீது தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் சர்வதேச சமூகம் இனிமேலும் இலங்கை கடற்படையின் இந்த குற்றங்களை புறக்கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
திருகோணாமலை கடற்படை முகாமில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை குறித்து கடற்படையின் உயர் அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டிருந்தார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது
கன்சைட்டில் சித்திரவதைகளும் காணாமல்போகச்செய்யப்படுதலும் இடம்பெறுவதாக கடற்படையின் உயர் மட்ட அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது.
கன் சைட் முகாமிற்கு பொறுப்பாகயிருந்த ஆர்எஸ்பி ரணசிங்க அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட கோத்தாபய ராஜபக்சவுடன் நேரடியாக தொடர்புகொள்ள கூடியவராக காணப்பட்டார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது
கோத்தாபய ராஜபக்ச அந்த முகாமிற்கு பல தடவை விஜயம் மேற்கொண்டார்.இதுதவிர இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதி எஸ்எம்பி வீரசேகர பிரதி சிசிர ஜெயக்கொடி ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்லக்கூடியவர்களாகயிருந்தனர் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது
ஆகக்குறைந்தது மூன்று கடற்படை சாட்சிகளாவது கடத்தல் நடவடிக்கை குறித்து அப்போதைய கடற்படை தளபதி வசந்த கராணகொடவிற்கு முழுமையாக தெரிந்திருந்தது என சிஐடியினரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் கடற்படை தளபதி டிரவைஸ் சின்னையா 2017 இல் சிஐடியினருக்கு வாக்குமூலங்களை அளித்த வேளை திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கடற்படை கல்லூரிக்கு தான் தலைமை தாங்கியவேளை கன் சைட்டில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கரனாகொடவிற்கு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கரனாகொட தன்னை இந்த விடயத்தில் தலையிடுவதை தவிர்க்குமறு நேரடியா தடையை விதித்தார் அதேபோல் கன்சைட் பகுதியிலிருந்து வெளியே செல்லும் அந்த பகுதிக்கு உள்ளே செல்லும் வாகனங்களை சோதனையிடுவதை தவிர்க்குமாறு உத்தரவிட்டார்
தனது படையினர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து 2009 மே10 திகதியளவில் தனக்கு தெரிந்திருந்தது என கரனாகொட சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.
ஐடிஜேபியின் சொந்த விசாரணையுடன் ஒத்துப்போகும் உத்தியோகபூர்வ விசாரணைகள் ஏனைய அதிகாரிகளிற்கும் இந்த இரகசிய முகாம்கள் குறித்து தெரிந்திருந்தது என்பதை உறுதி செய்துள்ளன.
திருகோணமலையில் பிரசன்னமாகியிருந்ததன் காரணமாகவும் கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றியதால் இந்த விசேட பிரிவின் குற்றங்கள் குறித்து ஏனையவர்களிற்கும் தெரிந்திருக்கவேண்டும்.
கன் சைட்டில் கடற்படையின் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து தங்கள் தலைமைக்கு தெரியப்படுத்திய கடற்படை அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர் அல்லது பதவிகள் பறிக்கப்பட்டனர்.
அதேவேளை இந்த முகாமை இயக்கியவர்களும் அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் பதவி உயர்வு பெற்றனர்.
திருகோணமலை கடற்படை தளத்திலிருந்து செயற்பட்ட கடற்படையின் விசேட பிரிவினருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டது அவர்களது வாகனங்கள் குறித்த விபரங்கள் பதியப்படாமலேயே அவர்கள் தங்கள் வாகனங்களை முகாமிற்குள் கொண்டு செல்லக்கூடியதாகயிருந்தது எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது