ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பதவிக்காலம் முடிவடைந்ததும் வசிப்பதற்காக உத்தியோகப்பூர்வ இல்லமொன்றை அமைச்சரவையின் ஊடாகப்பெற்றுக்கொள்ள எடுத்துள்ள நடவடிக்கையானது பிச்சையெடுக்கும் செயலென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
அத்துடன், 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கு வாக்கெடுப்புக்கு ஜே.வி.பி கடுமையான எதிர்ப்பை வெளியிடுகிறது. புதிய ஜனாதிபதி தெரிவானதும் மார்ச் மாதம் பாராளுமன்ற கலைக்கப்படும். அதனால் 2020ஆம் ஆண்டில் வரவு –செலவுத்திட்டமொன்று சமர்ப்பிக்க முடியாத நிலையே ஏற்படுமெனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கு வாக்குகெடுப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தவறான விடயம். ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல், ஆட்சிக் கவிழ்ப்பு என பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள தருணத்தில் இடைக்கால கணக்குகள் மூலம் நாட்டு மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதுடன், பொருளாதாரத்தையும் வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெல்ல முடியாது.
கடந்த ஆண்டும் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புதான் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. தேர்தலை மையப்படுத்தி இவர்கள் செய்துவரும் சமுர்தி மற்றும் ஏனைய விடயங்களுக்கே இந்த நிதி போதுமானதாக இருக்கும்.
இடைக்கால கணக்கு வாக்கெடுப்பில் ஜனாதிபதிக்கு மூலனதனச் செலவுக்காக 2,405மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு 2கோடி ரூபா செலவு செய்யும் வகையில் இவ்வாறு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 300ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாத இலட்சக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் ஜனாதிபதி ஒருவரின் செலவுக்கு ஒருநாளுக்கு 2கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மக்கள் பணத்தை நாசமாக்கும் வேலையாகும். இதேவேளை, அமைச்சரவையின் அனுமதியுடன் தற்போதைய ஜனாதிபதி வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்கு உத்தியோகப்பூர்வ இல்லமொன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்கு சில சலுகைகள் கொடுக்க வேண்டும். அதற்கு நாம் எதிர்ப்பில்லை.
ஆனால், நாட்டு மக்கள் 300 ரூபா சம்பளத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது துன்பகரமான சூழலில் வாழ்கின்றனர். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு மக்கள் பணத்தில் வீடுகள் கொடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக வீடொன்று இல்லை?. இது பிச்சையெடுக்கும் செயலாகும். வெட்கமில்லையா? என கேட்க விரும்புகின்றோம் என்றார்.