ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 67வது வயதில் நேற்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்கேஸ்வரி அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர் 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளீர்க்கப்படாமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதனை தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாட்டினை குறைத்து எழுத்துப்பணி பொதுப்பணிகளின் தன்னை ஈடுபடுத்திவந்ததுடன் கிழக்கு மாகாணம் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல வரலாற்று தடங்களை எழுதியுள்ளார்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொன்மைகளையும் ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளதுடன் நோய்வாய்ப்பட்டிருந்தவேளையிலும் கூட தனது ஆய்வுப்பணியை கொண்டு தொடர்ந்து எழுதிவந்தார்.
அன்னாரின் மறைவு என்பது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும் என புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது சடலம் இன்று வவுணதீவு,கன்னன்குடாவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)