திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்காக 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மாலை அந்த இடத்தில் விளையாடிக்கொண்டு இருந்த பிரிட்டோ ஆரோக்கியராஜின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சுமார் 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை சுஜித் உடலை மீட்பு குழுவினர் மீட்டனர்.
ஆழ்துளை கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சுஜித் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுஜித்தின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில், குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக, சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி, மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான குழு அமைத்துள்ளனர்.