நீங்கள் என் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் பிரச்சினைகளை தீர்த்து, பாதுகாப்பான, சௌபாக்கியமான, சுவீட்சமான வாழ்க்கையை வாழ வைப்பேன். சிறைகளில் வாடும் 274 தமிழ் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வளித்து விடுவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் றக்கா வீதியிலுள்ள இளங்கதிர் மைதானத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றுகையில்,
கடந்த ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை தந்ததனால், உங்களுக்கு எங்கள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் என்மீது நம்பிக்கை வையுங்கள். நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றியிருக்கின்றேன்.
நான் ஆட்சிக்கு வந்ததும், இப் பகுதி மக்களின் பிரச்சினைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்தி செய்வேன். உங்களின் சில தலைவர்கள் உங்களை இன்னும் கடந்த காலத்திலேயே வைத்திருக்கின்றார்கள். நான் உங்களை எதிர்காலம் நோக்கி சிந்திக்கின்றேன்.
உங்களை சௌபாக்கியமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வேன்.
வடமாகாணத்தில் காணப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் மகிந்த ராஜபக்ச காலத்தில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இப் பகுதியில் பல இராணுவ முகாம்களே இருந்தன.
இப் பகுதியில் இராணுவம் வசமிருந்த காணிகளில் 90 வீதமான காணிகளை பொது மக்களிடம் கையளித்தவன் நானே. தொண்டமனாறு உள்ளிட்ட காங்கேசன்துறை பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட காணிகளை நான் விடுவித்துள்ளேன். ஏனைய பகுதிகளை விடுவிப்பதற்காக டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தேன்.
நான் எனது தேர்தல் விஞ்ஞானபத்தில் விசேடமாக அபிவிருத்தி பற்றியே உள்ளடக்கியிருக்கின்றேன்.
விவசாயத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன். மீனவ குடும்பங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பல யோசனைகளை முன்வைத்துள்ளேன்.
விசேடமாக, இளைஞர், யுவதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கியிருக்கின்றேன். கல்வி வளர்ச்சிக்காக அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்வேன். நாங்கள் உங்களுக்கு அநீதியைப் பெற்றுக்கொடுக்கவில்லை. சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து உலகத்தில் எங்கும் இல்லாதவாறு சமூகத்துடன் இணைத்தோம்.
சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். நாங்கள் பிரச்சினைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
சௌபாக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்குரிய செயற்திட்டங்களை தான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருக்கின்றேன்.
இவை அனைத்தும் செய்ய முடியாத உறுதிமொழிகள் அல்ல. செய்யக்கூடியவற்றைத் தான் முன்மொழிந்துள்ளேன்.
நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்றார்.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்