விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள ஆதித்ய வர்மா, சீமானின் தவம், யோகிபாபுவின் நகைச்சுவை படமான பட்லர் பாலு, சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ள மிகமிக அவசரம் ஆகிய படங்கள் வருகிற 8-ந்தேதி வெளியாகின்றன.
விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா, விஷாலின் ஆக்ஷன், ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா ஆகிய படங்களும் இந்த மாதம் திரைக்கு வருகிறது. சசிகுமாரின் நாடோடிகள்-2, திரிஷாவின் கர்ஜனை, சேரன் கதாநாயகனாக நடித்துள்ள ராஜாவுக்கு செக், பிழை, தமயந்தி, களரி, இருட்டு, ஜடா, கண்ணாடி ஆகிய படங்களும் இந்த மாதம் வெளியாக உள்ளன. இவற்றில் ஒரு சில படங்கள் கடைசி நேரத்தில் தள்ளிப்போகலாம்.
கடந்த அக்டோபர் மாதம் 14 படங்கள் வெளிவந்தன. இதில் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தது. ரூ.180 கோடி செலவில் தயாரான பிகில் ரூ.200 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது.
கைதி படம் பிறமொழி திரையுலகினரையும் கவர்ந்தது. தெலுங்கில் வெங்கடேசும் இந்தியில் ஷாருக்கானும் ரீமேக் செய்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். கைதி 2-ம் பாகம் தயாராகும் என்றும் அறிவித்துள்ளனர்.