லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து திரைக்கு வந்துள்ள கைதி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை சுமார் ரூ.40 கோடி செலவில் எடுத்து இதுவரை ரூ.60 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியில் ரீமேக் உரிமையை வாங்கவும் போட்டி நடக்கிறது. கைதி படத்தின் 2-ம் பாகமும் தயாராக உள்ளது.
இதுகுறித்து கார்த்தி கூறும்போது, “30 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் கைதி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவதாகவும் கதை தயாராக உள்ளது என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் தெரிவித்துள்ளார்” என்றார். படம் வெற்றி பெற்றதற்கு கார்த்தி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
“கைதி படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தால் மட்டும் போதாது. ஒரு நல்ல கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் கைதி படக்குழுவினர் முழு உழைப்பை கொடுத்தனர். ஆனாலும் படத்துக்கு இந்த அளவுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த வெற்றிக்காக நன்றியுடன் தலை வணங்குகிறேன். எனது ஏற்ற இறக்கங்களில் என்னோடு இருந்து அன்பை கொடுத்த சகோதர சகோதரிகளை பெருமைப்படுத்த தொடர்ந்து உழைப்பேன். உங்களுக்காக டில்லி திரும்ப வருவான்”
இவ்வாறு கூறியுள்ளார்.