ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் பொது சம்மேளனத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை விட சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் வெற்றிகரமான திட்டங்களை கொண்டுள்ளது.
எமது தலைவர் கட்சியினை இந்த நிலைக்கு கொண்டு வந்து, நடுநிலை வகிப்பதாக தெரிவித்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகி சட்ட விரோதமாக பதில் தலைவர் ஒருவரை நியமித்துள்ளமை தொடர்பில் நான் வருத்தமடைகிறேன்.
எம்மை நீக்குவதாக ஏழு முறை கட்சி மாறிய பொதுச் செயலாளர் கூறுகிறார்.
நீக்குவதென்றால் யாப்பின் பிரகாரம் 6 மாதம் தொடக்கம் ஒரு வருடம் வரை செல்லும்.
2015 இல் எமது ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்லவிருந்த பதவி அது.
மீண்டும் ஒரு முறை ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கம் ஒன்றினை அமைக்கவிருந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு எமது தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து விலகினர்.
யார் நமக்கு தீங்கு செய்தது? ஐக்கிய தேசிய கட்சியா? அல்லது ராஜபக்ஷ தரப்பினரா? ராஜபக்ஷ தரப்பினர் மீது எனக்கு கடும் கோபம் இருக்கிறது.
இந்த நாட்டுக்கு செய்த தீங்கு காரணமாக.
தனக்கு தனிப்பட்ட ரீதியில் பல துன்பங்களை செய்துள்ளனர். வேறு எதற்கு நான் அவர்களை வெறுக்கின்றேன். என்னை விட அவர் அழகானவர் என்பதனாலா? என்றார்.