இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தலைமையில் நாடு தொடர்ந்து அபிவிருத்தியையும் சமாதானத்தையும் அடையுமென்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இத் தேர்தலை மிக அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் வெற்றிகரமாக நடத்தியமைக்காக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்துக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இலங்கை இந்திய நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கு மிடையிலான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கையுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இரண்டு நாடுகளுக்குமிடையிலுள்ள வலுவான உறவை மேலும் பலபடுத்தும் வகையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் வெற்றிகரமான உறவுகள் முன்னெடுத்துச் செல்லப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.