உலகில் பெரும்பாலான நாடுகளை போலவே இந்தியாவிலும் கொலை விகிதங்கள் கடந்த பல ஆண்டுகளாக படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. காதல் விவகாரங்களின் விளைவாக கொலைகள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் வெளியிடப்பட்டதேசிய குற்ற பதிவு ஆணைய அறிக்கையின் படி, ஒரு நபரைக் கொல்வதற்கான முக்கிய காரணங்களில் 2001 மற்றும் 2017க்கு இடையில் காதல் விவகாரங்கள் மிக உயர்ந்த விகிதத்தில் அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.
2001 ஆம் ஆண்டில், தேசிய குற்ற பதிவு ஆணையம் 36,202 கொலைகளை பதிவு செய்தது. இது 2017ல் 28,653 ஆக குறைந்து உள்ளது. இது 21 சதவீதம் குறைவு ஆகும். இந்த காலக்கட்டத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகள் அதிகம். இருப்பினும், 2017 ஆம் ஆண்டில் காதல் விவகாரங்களுக்காக நடந்த கொலைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
ஆந்திராவில் (தெலுங்கானா உட்பட) காதல் விவகாரங்களில் சராசரியாக 384 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது நாள் ஒன்றுக்கு சராசரி ஒன்றாகும்.
உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 395 பேர் காதல் விவகாரங்களுக்காக கொலை செய்யப்படுகிறார்கள். நாட்டில் இதுதான் உயர்ந்த விகிதமாகும். உத்தர பிரதேசத்தை தவிர தமிழகம், கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய நாடுகளில் கொலைக்கான இரண்டாவது பெரிய காரணம் காதல் விவகாரம் ஆகும். பெரும்பான்மையான மாநிலங்களில், காதல் விவகாரங்கள் கொலைக்கான மூன்றாவது அல்லது நான்காவது பெரிய காரணமாக இருந்து உள்ளன. இதில் சத்தீஸ்கார், ஒடிசா, மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்கள் ஆகியவை அடங்கும்.
தமிழ்நாட்டில் 2001 முதல் 2017 வரை தனிப்பட்ட காரணங்களுக்காக 335 கொலைகளும், காதல் விவகாரங்களுக்காக 240 கொலைகளும் , சொத்து விவகாரங்களுக்காக 133 கொலைகளும், லாபத்திற்காக 105 கொலைகளும் வரதட்சணைக்காக 10 கொலைகளும் நடந்து உள்ளன.
கேரளா மற்றும் மேற்கு வங்காளத்திலும் கொலைக்கான முதல் ஐந்து காரணங்களில் காதல் விவகாரம் இருந்தபோதிலும், இந்த இரு மாநிலங்களிலும் காதல் விவகாரங்களுக்காக மிகக் குறைவான கொலைகளே நடந்து உள்ளன.
2017 ஆம் ஆண்டில், கவுரவக் கொலைகள் 92 நடந்து உள்ளன. 2016 ஆம் ஆண்டில் இதே போன்று 71 கொலைகள் நடந்து உள்ளன.