புடவையில் இருக்கும் அழகும் கவர்ச்சியும் மாடர்ன் உடையில் இல்லை என்று நடிகை அனுபமா கூறினார்.
தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் கேரளாவில் இருந்து வந்திருந்தாலும் எந்த மொழியில் நடித்தாலும் அந்த ஊர் பெண் மாதிரியே மாறி விடுவேன். அந்தந்த மாநிலத்தின் நடை உடை பாவனையில் என்னை காட்டிக்கொள்ளவும் அக்கறை எடுத்துக்கொள்வேன். நடிக்கும்போதும் சரி வெளியே போனாலும் சரி கலாசார சம்பிரதாய முறைப்படி இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.
கவர்ச்சி என்பதை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கிறார்கள் என்னை பொறுத்தவரை நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கும் எனக்கும் சகஜமாக இருக்கும் உடைகளைத்தான் அணிவேன். புடவை அணிவதை சாதாரணமாக நினைக்க கூடாது. புடவையிலும் கவர்ச்சி காட்டலாம். புடவை போன்ற நமது கலாசார சம்பிரதாய உடையில் இருக்கும் அழகும் கவர்ச்சியும் மாடர்ன் உடையில் இருக்காது.
உடைகள் அரை குறையாக இருந்தால்தான் அழகாக தெரிவார்கள் என்று நினைப்பது பிரமைதான். மேக்கப் கூட தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்ற அவசியத்தில் போடுகிறேனே தவிர, படப்பிடிப்பு முடிந்தும் மேக்கப் இல்லாமல் ஒரு சாதாரண பெண்ணாக இருக்கவே விரும்புகிறேன். வெளியே கிளம்பும்போது எல்லோரும் மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்வார்கள். நான் ஒரு சொடுக்கு போடுவதற்குள் தயாராகி வெளியே வந்து விடுவேன்.”
இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.