கோவாவில் இன்று மாலை நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்படுகிறது.
இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று (20-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய சினிமா துறையில் பெரிய பங்களிப்பு செய்தவர்களை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. இந்திய சினிமா துறைக்கு ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக செய்துவரும் சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
இன்று மாலை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விழாவில் நடிகர் அமிதாப்பச்சனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
26 இந்திய படங்களும் திரையிடப்பட உள்ளன. தமிழ் படங்கள் சார்பில் பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய 2 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியில் இருந்து கல்லிபாய், சூப்பர் 30, பதாய் ஹோ, உரி:சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.