மெதமுலனா டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பில் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (21) மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரசியலமைப்பின் 35 ஆவது பிரிவுக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் அல்லது சிவில் வழக்கைத் தொடர அரசியலமைப்பில் அனுமதியில்லை என, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் கடவுச்சீட்டையும் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், வெளிநாடு செல்வதற்கு அவர் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவிற்கு அமைய, ஜனாதிபதி வழக்கறிஞர் அலி சப்ரி இன்று மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, அவருக்கான பிணையாளர்கள் மற்றும் அவர்களது பிணை ரொக்க பணத்தையும் விடுவிக்குமாறு மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.
டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாண பணியில், ரூ. 3 கோடி 39 இலட்சம் அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.