இந்தியாவிலேயே தமிழகத்தில் பயன்படுத்தும் பாலில்தான் நச்சுத்தன்மை அதிகம் என மத்திய அமைச்சர் பதில் அளித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். முதல்வர் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பாலில் நச்சுத்தன்மை கலந்துள்ளது குறித்து மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, நாட்டிலேயே AFLATOXIN எம்-1 என்ற நச்சுத்தன்மை கொண்ட பால் தமிழகத்தில்தான் அதிகம் விற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் கலந்திருப்பது தெரியவந்திருப்பதாகவும், அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
“பாலில் நச்சுத்தன்மை குறித்து T.R.பாலு MP எழுப்பிய கேள்விக்கு, கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான AFM1 நச்சுப்பொருள் மாட்டுத் தீவனம் மூலம் பாலில் கலந்திருப்பதாகவும், இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து.
இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.