இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…
“விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதை கண்டிக்காமல், விடுதலைப் புலிகளால் சோனியாகாந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு கூறியிருப்பது வீண் பழிசுமத்தும் செயல். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு 2009 ஆம் ஆண்டில் வருகை தந்த 3 லட்சம் ராணுவ வீரர்கள் தற்போது வரை அங்கு தான் இருக்கிறார்கள். இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள அவசர சட்டம், புதிதாக ராணுவத்தை கொண்டுவருவதற்கான சட்டம் அல்ல. ஏற்கனவே அங்கு இருக்கின்ற ராணுவத்திற்கு அதிக அதிகாரத்தை அளிக்கும் சட்டம். அங்கு புதிதாக அமைந்த ஆட்சியில், இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால் அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும்.”என்றார்.