பிடதி ஆசிரமத்தில் நிர்வாகியாக இருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் நித்யானந்தா மீது அடுக்கடுக்கான பாலியல் புகார் தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
நித்யானந்தா ஆசிரமத்தில் நடக்கின்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், பாலியல் இச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சிஷ்யைகள் குறித்தும் குறிப்பிட்டு கனடா நாட்டு சிஷ்யை ஒருவர் பெங்களூரு காவல்துறையினரிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு நித்யானந்தா செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்தியதாக பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா அளித்த புகாரின் பேரில், ஆசிரமத்தில் இருந்து ஒரு சிறுவன்- சிறுமி மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது 2 பெண்கள் நித்யானந்தாவின் பிடியில் சிக்குண்டு கிடப்பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நித்யானந்தாவின் முன்னாள் சிஷ்யையான கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லாண்டரி, தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயற்சித்ததாக நித்தியானந்தா மீது பெங்களூரு போலீஸில் கடந்த 12 ந்தேதி புகார் அளித்தார்.
கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே என்ற இந்த பெண், நித்யானந்தா ஆசிரமத்தில் நிர்வாகியாக இருந்தவர். வெளிநாடுகளுக்கு போதனைகளுக்கு செல்லும் நித்யானந்தாவின் பேச்சால் ஈர்க்கப்பட்ட இவர் 2009ஆம் ஆண்டு முதல் ஆன்மிகத்தின் பக்கம் திரும்பினார். இந்து மதத்தின் மீதான ஈர்ப்பால் 2015ல் பிடதி ஆசிரமத்திற்கு வந்த சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் அங்கேயே தங்கினார். ஆசிரமத்தில் ஆன்மிக தொண்டு செய்வோருக்கு வழங்கப்படும் பெயரைப் போலவே சாராவும், மா நித்யா சுதேவி என்ற பெயராலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
ஆசிரமத்தில் சேர்ந்த சாரா ஆரம்ப காலங்களில் சிஷ்யையாக இருந்த நிலையில் பின்னர் அவருக்கு படிப்படியாக பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டதாம்… பிடதி ஆசிரமம் மற்றும் நித்தியானந்தாவின் சமூக வலைத்தள கணக்குகளை எல்லாம் பராமரிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தார் சாரா. இதனால் ஆசிரமத்தில் உள்ள அனைவரின் நம்பிக்கையை பெற்றவராக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் 2018ல் சாராவுக்கு நித்யானந்தா மூலம் பல கசப்பான நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
நித்யானந்தாவிடம் இருந்து பல்வேறு ஆபாசமான குறுந்தகவல்கள் மட்டுமின்றி பல ஆபாசப் படங்களும் சாராவுக்கு வந்துள்ளது. இதனால் முதலில் அதிர்ந்து போன சாரா, ஒருவேளை தவறுதலாக வந்திருக்கலாம் என நினைத்து அதை தவிர்த்துள்ளார். ஆனால் ஆன்மிக பிரசாரத்துக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்கு சென்றுள்ள சாராவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து கண்ணீர் மல்க சாராவிடம் கூறியுள்ளனர். இதை பார்த்து அதிர்ந்து போன சாரா, இது குறித்து ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவிடம் கேள்விகள் எழுப்பியதோடு, ஆசிரமத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலம் ராம்நகர் காவல் நிலையத்தில் 20 பக்கங்கள் கொண்ட பரபரப்பான புகார் மனுவை அளித்திருக்கிறார் சாரா. அதில் நித்யானந்தா தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாகவும், ஆன்மீகம் என்ற பெயரில் அவர் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்டோரிடம் அத்துமீறுவதாகவும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இதற்கு முன் நித்தியானந்தா மீது பாலியல் புகார் வந்த போது அவர் ஆண்மை இல்லாதவர் என கூறி வழக்கை திசை திருப்பியது முற்றிலும் பொய் என கூறியுள்ள சாரா, பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடும் திறன் அவருக்கு இருப்பதாக கூறியிருக்கிறார்.
நித்யானந்தா தன்னை சிவன் என்றும், பெண் சிஷ்யைகளை பார்வதி என்றும் மூளைச் சலவை செய்து மோட்ச இன்பம் தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். யாரெல்லாம் நித்யானந்தவால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் என்ற பட்டியலையும் குறிப்பிட்டுள்ளார். நித்யானந்தா தன்னுடைய முகநூல் மெசஞ்ஜரில் செய்த காதல் சாட்டிங்கையும் சான்றாக கொடுத்துள்ளார். வெளிநாட்டில் இருந்து கொண்டு, நித்யானந்தாவின் சில்மிஷத்தை சமூகவலைதளத்தில் போட்டு உடைத்து வருகிறார்.
அத்தோடில்லாமல் நித்யானந்தாவிடம் ஏமாந்த ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஹரன் சிங்கம் என்பவரிடம் நடத்திய உரையாடலையும் வீடியோவாக பகிரங்கப்படுத்தியுள்ளார் சாரா லாண்டரி.
மோட்ச இன்பத்தை உணர, பிரம்மச்சாரியாக மாறி மத தர்மத்துக்கு சேவையாற்ற, தனது சொத்து முழுவதையும் விற்று நித்யானந்தாவை நம்பி வந்துள்ளார் ஹரன் சிங்கம்.
ஆரம்பத்தில் நித் சொல்வதை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்டு செயல்பட்ட ஹரன் சிங்கம், அங்கு நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
நித்தியானந்தா மத தர்மத்தை ஒரு முகமூடியாக வைத்துக்கொண்டு, பல திருட்டு வேலைகளை செய்து வருகிறார் என பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.