தென்னிந்திய திரையுலகம் 1980-களில்தான் பெரிய வளர்ச்சி கண்டது. அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் அறிமுகமானவர்கள் முன்னணி கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் கொடி கட்டி பறந்தார்கள்.
பதிவு: நவம்பர் 26, 2019 05:45 AM
சினிமாவில் நீண்ட காலம் நீடிக்கவும் செய்தனர். அப்போதைய நடிகர்களைத்தான் ஒவ்வொரு மொழியிலும் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அவர்களில் சில நடிகர்களை தவிர பலரும் அப்பா, அம்மா, அண்ணன், அக்காள், அண்ணி வேடங்களுக்கு மாறிவிட்டார்கள். 80-களில் திரையுலகில் கோலோச்சிய நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுவது வழக்கம்.
ஏற்கனவே சென்னையில் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன. இந்த ஆண்டுக்கான சந்திப்பு ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவி வீட்டில் நடந்தது. இதில் நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், சுமன், சுரேஷ், ரகுமான், நாகார்ஜுனா, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, ரமேஷ் அரவிந்த், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, ராதிகா, ஜெயசுதா, ஷோபனா, சுமலதா, நதியா, ராதா, அமலா, சரிதா, லிசி, பூர்ணிமா, ஜெயபிரதா, ரேவதி, மேனகா, அம்பிகா, சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் கட்டிப்பிடித்தும் நலம் விசாரித்தனர். பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிரஞ்சீவி வீட்டிலேயே அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.