தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு குடியரசு மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய குடியரசு மாளிகைக்கு வருகை தந்த கோத்தபய ராஜபக்சேவை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியும் உடனிருந்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புப் பிறகு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் கோத்தபய ராஜபக்ச பேசியதாவது, “நானும் பிரதமர் மோடியும் பலதரப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனையில் இரு நாடுகளின் பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டது.
நாங்கள் மீனவர்களின் பிரச்சனை குறித்தும் பேசினோம். தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து நாங்கள் பேசினோம்.
மீனவர்கள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை நாங்கள் தொடர்ந்து கொண்டிருப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.
மேலும் எங்களது புலனாய்வு அமைப்புகளை மேம்படுத்த பிரதமர் மோடி வழங்கிய 50 மில்லியன் டாலருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.