நடிகர் பாக்கியராஜ் நேரில் ஆஜராக தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னையில் நடந்த பட விழாவில் பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பேசும்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது. பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறு நடக்க வாய்ப்பில்லை.
பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் பயன்படுத்தி கொண்டான். கள்ளக்காதலுக்காக புருஷனை, குழந்தையை கொல்லும் சம்பவங்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேசினார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் “பாலியல் பலாத்காரத்துக்கு பெண்கள் மீது பழி போட வேண்டாம். ஊசி, முள், சேலை எல்லாம் பல தடவை சொல்லப்பட்டு விட்டது. இந்த சிந்தனையால் பல பெண்கள் இறந்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஆந்திர மாநில மகளிர் அமைப்பு அளித்த புகாரின் பேரில் ஆந்திர மாநில போலீசார் பாக்யராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “பாக்யராஜ் இந்திய பெண்களை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தி பேசிய கருத்தை கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்கள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வரவும் பெண்கள் உரிமைக்காகவும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது தெரியாமல் பாக்யராஜ் பேசி உள்ளார். பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பெண்களை பற்றி அநாகரீகமான முறையில் பேசியதாக எழுந்த புகாரின்பேரில், நடிகர் பாக்கியராஜ் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
“பொள்ளாச்சி சம்பவத்தில் என்னை விட்டுவிடுங்கள் அண்ணா என்று பெண்கள் கதறுவதை வீடியோவில் பார்த்து ஒரு தந்தையாக நான் பதறினேன். இரவில் தூக்கம் வரவில்லை. பெண்கள் ஏன் இப்படி இடம் கொடுத்தார்கள். எச்சரிக்கையாக இருந்து இருக்கலாமே என்ற கவலையில்தான் சில கருத்துக்களை வெளியிட்டேன்.
மற்றபடி பெண்களுக்கு நான் மதிப்பு கொடுப்பவன். எம்.ஜி.ஆரைப்போல் அனைத்து தாய்குலங்களையும் மதித்து வருகிறேன். நான் எடுத்த மவுன கீதங்கள், தூறல் நின்னுபோச்சு, முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள் உள்ளிட்ட அனைத்து படங்களிலுமே பெண்களை போற்றி இருந்தேன். அவர்களை தவறாக காட்டியதே இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தின் தாக்கத்தால் பெண்கள் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமே என்றுதான் அப்படி பேசினேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. என் பேச்சுக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் நிறைய பேர் சரியான கருத்தை சொன்னதாகவே எண்ணியுள்ளனர். முன்பு பெண்கள் தங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். தற்போது செல்போன்கள் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி விட்டன. படிப்பு, வேலையில் ஆண்களுடன் பெண்கள் போட்டி போடலாம். கல்பனா சாவ்லாபோல் விண்வெளியில் பறக்க முடியும். ஆனால் ஆண்கள் மது அருந்துகிறார்கள் என்று அவர்களும் செய்தால் மரியாதையை இழக்க நேரும்.
பெண்களை அடிமையாக யாரும் நடத்தவில்லை. அவர்களுக்கு தேவையான சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. மனைவியை தவிர அனைத்து பெண்களையும் தாயாகவும் சகோதரியாகவும் நினைக்கும்படித்தான் நமது கலாசாரம் கற்றுக்கொடுத்து இருக்கிறது. பெண்கள் நெருப்பு போல் இருந்து சுற்றி உள்ளவர்களிடம் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.