பாஜகவில் ராதாரவி இணைந்திருப்பதன் மூலம் ‘பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்’ என பாடகி சின்மயி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடிகர் ராதாரவி, அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராக இருந்த ராதாரவி, ‘கொலையுதிர்காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் தான் தி.மு.க.வில் இருந்து விலகியதாக அறிவித்தார் ராதாரவி.
பின்னர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்த ராதாரவி, அக்கட்சியில் இணைந்து சில மாதங்களே ஆன நிலையில் கடந்த 30-ம் தேதி பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் நடிகர் ராதாரவி, பாஜகவில் இணைந்த செய்தியை பாஜக தலைமைக்கும், பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணியின் கவனத்துக்கும் பாடகி சின்மயி கொண்டு சென்றுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக மற்றும் ஸ்மிருதி இராணியை டேக் செய்து கருத்து பதிவிட்டிருக்கும் அவர், நடிகர் ராதாரவி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். டப்பிங் யூனியனில் அவர் தலைவராக இருந்தபோது அவரிடம் கேள்வி எழுப்பினாலோ அல்லது பாலியல் புகார் தெரிவித்தாலோ அவர்களுக்கு தடை விதித்து விடுவார்கள். அவர் பாஜகவில் இணைந்திருப்பதன் மூலம் “பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்” என்றும் அக்கட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.