ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் முதல் தடவையாக நேற்று கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மகாநாயக்க தேரர்களிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உட்பட கட்சியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மறுசீரமைப்புகள் தொடர்பில் இதன்போது மகாநாயக்க தேரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க விளக்கமும் அளித்தார்.
மல்வத்து பீடத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, திம்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசியை பெற்றுக்கொண்டதுடன், கட்சியில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினைகளையும் எடுத்துரைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய பீடத்திற்குச் சென்ற முன்னாள் பிரதமர், வரக்காகொட ஞானரத்த தேரரிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்டதுடன், அவரிடமும் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
பிரதமராக பணிப்புரிந்த காலத்தில் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் இவர் இதன்போது நன்றிகளை தெரிவித்ததுடன், மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பாததும்பர, ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர் திலினி பண்டார தென்னகோன், மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அய்லபெரும உட்பட பலர் பிரதமருடன் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.