இலங்கையில் இரு தேசம் ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தலை கொண்ட அவர்களின் காய்நகர்த்தல்களின் இலங்கை தலையிட தயாரில்லை எனவும் வெளிவிவகார செயலாளர் அறிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க இது குறித்து தெளிவுபடுத்துகையில்
இலங்கையில் இரண்டு இராச்சியம் என்ற கருத்துக்கள் இங்கிலாந்து கட்சிகள் முன்வைக்கும் காரணியில் நாம் அறிந்த அளவில் இது டுவிட்டர் மற்றும் முகப்புத்தக கணக்கு பதிவுகளை அடையாளபடுத்திய காரணியாகவே கூறப்பட்டு வருகின்றது. அவர்களின் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவம் எமக்கு கிடைக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் தற்போது இங்கிலாந்தில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அவர்களின் அரசியல் காய்நகர்த்தல் முறைமையில் ஒன்றாக இது அமைந்துள்ளது. எனினும் இது இடம்பெற்றது கடந்த மாதம் 25 ஆம் திகதியலவிலாகும். இந்த கருத்து குறித்து லண்டனில் உள்ள எமது தூதரகம் மூலமாக இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை இரண்டு கடிதங்களின் மூலமாக அறிவித்துள்ளோம்.
கொன்சவேடிவ் கட்சியின் கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடுமையான தமது அதிருப்தியை வெளியிடுவதுடன் இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் இது ஏற்றுக்கொள்ள முடியாத கொள்கையாகும் என்பதை நாம் அறிவித்துள்ளோம். எனினும் அவர்களின் அரசியல் நகர்வுகளை நாம் கையில் எடுத்து பிரசாரம் கொடுக்கக்கூடாது என்ற காரணத்தினால் இராஜதந்திர ரீதியிலான நகர்வுகளில் இதனை முடித்துக்கொண்டோம். எனினும் அண்மையில் இலங்கையின் அரசியல் களத்தில் சிலர் இந்த காரணிகளை பகிரங்கப்படுத்தியுள்ள காரணத்தினால் வெளிவிவகார அமைச்சு பதில் தெரிவிக்கவேண்டியுள்ளது. அதற்கான இந்த காரணிகளை நாம் மீண்டும் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவிக்கின்றோம். இலங்கை இராச்சியத்தில் ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. அதற்கான சாதியமும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துள்ளோம் என்றார்.
இந்நிலையில் நேற்று காலையில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதானது,
பிரித்தானியாவில் எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சியானது தேர்தல் விஞ்ஞாபனத்தில் , இலங்கையின் அரசியல் குழப்பங்களுக்கு இரு அரசுகள் இருப்பதே தீர்வு என்ற பதம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கவனத்தை செலுத்தியுள்ளது.
கொன்சவேடிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 55ஆவது பக்கத்தில், சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கில் இரு அரசுகள் தீர்வு எனும் பதம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகம் இதுகுறித்து கடுமையாக எதிர்ப்பு முறையீட்டை கொன்சவேடிவ் கட்சியின் இணைத் தலைவரான ஜேம்ஸ் கிளவரிடம் முன்வைத்துள்ளது. இந்த முறைப்பாட்டு கடிதம் மூலம் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் மனிஷா குணசேகரவினால் நம்வம்பர் மாதம் 27 திகதி அன்று தெரிவிக்கப்பட்டது. இரு அரசுகள் தீர்வை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் ஐக்கிய ராஜியத்தில் உள்ள எந்த ஒரு கட்சியும் இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்ததில்லை எனவும் அனைத்து கட்சிகளினால் உருவாக்கப்பட்ட பிரித்தானிய அரசாங்கம் , ஐக்கிய இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க ஆதரவு தெரிவித்தன எனவும் இலங்கை உயர் ஸ்தானிகர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்திற்கு மின் அஞ்சல் மூலம் 27 நவம்பரில் கொன்சவேடிவ் கட்சியின் பிரதித்தலைவர் போல் ஸ்கல்லி பின்வருமாறு பதிலளித்திருந்தார், இலங்கையுடனான கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இரு அரசுகள் என்ற பதம் இஸ்ரேல், பலஸ்தீனத்தையே குறிக்கின்றது என அவர் தெரிவித்திருந்தார். மேற்படி கருத்துடன் இருப்பதாகவே ஐக்கிய ராஜியத்தின் சுற்றுச்சூழல் உணவு மற்றும் கிராமிய விவகார அரச செயலாளர் தெரேசா வில்லேஸ் தனது சமூகவலைத்தில் நவம்பர் 30 ஆம் திகதி பதிவேற்றியிருந்தார். இரு அரசுகள் என்ற தீர்வு இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கே பொருந்தும்.
இலங்கைக்கல்ல என டுவிட்டரில் நேற்று 3ஆம் திகதி கொன்சவேடிவ் கட்சியின் பிரதித்தலைவர் போல் ஸ்கல்லி மீண்டும் தெரிவித்திருந்தார். இவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட கருத்தை கொனசவேடிவ் கட்சி திருத்திக்கொள்ளவேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு எதிர்பார்க்கின்றது என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.