பிரிட்டனில் பொதுத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பான கருத்து இடம்பெற்றதையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வெளியிட்ட குறிப்புகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்து பின்வருமாறு அமைவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிடுகிறது.
உலகளாவிய ரீதியில் நல்லிணக்கம், ஸ்திரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை எட்டுவதற்கான சர்வதேச நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் ஆதரிப்போம். அத்துடன் முன்னர் மோதல் வலயங்களாக இருந்த சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கில் இரண்டு தேச தீர்வுக்கான எமது ஆதரவைத் தொடர்ந்து பேணுவோம்.
மேற்படி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதையடுத்து பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் ஆலோசனையின்படி உடனடியாக கன்சர்வேடிவ் கட்சியின் இணைத் தலைவரான ஜேம்ஸ் க்லெவர்லியுடன் தொடர்புகொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை பற்றி குறிப்பிட்ட கருத்து தொடர்பாக பலத்த கண்டனத்தை தெரிவித்தார். பிரட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரான மனிஷா குணசேகர கடந்த நவம்பர் 27ஆம் தகதி கன்சர்வேடிவ் கட்சியின் இணைத் தலைவருக்கு இக்கடிதத்தை எழுதியிருந்தார்.
இலங்கைக்கு இரு தேச தீர்வொன்று தேவை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இவ்வாறான நிலைப்பாடு பிரிட்டனின் எந்தவொரு கட்சியினதும் கருத்தாக இருந்ததில்லை. ஐக்கிய இலங்கையில் எப்போதுமே அமைதியும் நல்லெண்ணமும் இடம்பெறுவதற்கே தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்களும் அவற்றுக்குத் தலைமை தாங்கிய அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கி வந்தன என்பதை அவர் மீளவும் உறுதிப்படுத்தியிருந்தார். எனவே, இலங்கை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த பந்தி முறையாக திருத்தி எழுதப்பட்டு இலங்கை தொடர்பான கன்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு சரியான முறையில் பிரதிபலிக்கும் வகையில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று இலங்கை உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை உயர் ஸ்தானிகரின் மேற்படி செயற்பாடு மூலமும் கன்சர்வேடிவ் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மூலமும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதித் தலைவர் போல் ஸ்கல்லி கீழ்க்காணும் விளக்கத்தை கடந்த நவம்பர் 27ஆம் திகதி இலங்கை உயர் ஸ்தானிகரின் மின்னஞ்சல் தொடர்பினையடுத்து வழங்கியுள்ளார்.
இலங்கை தொடர்பான கட்சியின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முறையாக விளக்கப்படுத்தும் போது இருநாட்டு ஏற்பு வரியானது மத்திய கிழக்கில் இஸ்ரேலிய- பலஸ்தீனிய நிலையைக் குறிப்பிடுவது போலவே கருதப்படுகிறது. பிளவுபட்ட சமூகங்களில் அமைதி மற்றும் நல்லிணககம் ஆகியவற்றுக்காக தற்போது இடம்பெறும் முயற்சிகள் இலங்கை மற்றும் சைப்ரஸ் பற்றிய கடப்பாடுகளின் போதும் தொடரும் என்பதையே குறிப்பிடுகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிலைப்பாட்டை பிரிட்டனின் சூழல் உணவு மற்றும் கிராமப்புற அலுவல்கள் தொடர்பான இராஜாங்க செயலாளர் தெரேசா வில்லியர்ஸ் மீள உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த நவம்பர் 30ஆம் திகதி அவரது சமூக ஊடக (பேஸ் புக்) பக்கத்தின் மூலம் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
இரு தேசங்களுக்கான தீர்வு என்ற குறிப்பு மத்திய கிழக்கையே குறிக்கிறது. சைப்பரஸையோ அல்லது இலங்கையையோ அல்ல. நான் இது தொடர்பாக வெளிநாட்டு செயலாளர் மொமினிக் ராப்புடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அவரும் அதனை உறுதி செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.