ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ‘கழுத்து அறுப்பது போன்ற’ சைகை காட்டியமை தொடர்பில் லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்நாட்டின் பொது ஒழுங்குகள் சட்டத்தின் 4 A பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய அவருக்கு 2,400 ஸ்ரேலிங் பவுண் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04 ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகார்களை நோக்கி ‘கழுத்து அறுப்பது போன்ற” சைகை காட்டி அச்சுறுத்தியதாக பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தர்ப்பத்தில் இராணுவ உடை அணிந்திருந்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி, அவர்களை அச்சுறுத்தும் வகையில் மூன்று முறை இவ்வாறு சைகை செய்திருந்ததோடு, குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியது.
அத்துடன் இது தொடர்பில் லண்டனிலுள்ள பொலிஸில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதோடு, பின்னர் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்த்கது.
பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும்பாலான முன்முனை தாக்குதல்களை மேற்கொண்ட, இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.