சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் காமெடி கதைகளையே தேர்வு செய்தார். முதல் படமான மெரினாவில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார்.
தனுசின் 3 படத்திலும் காமெடி நடிகராக வந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது. வசூலையும் அள்ளியது.
ரஜினிமுருகன் படத்திலும் காமெடியில் கலக்கினார். அதன்பிறகு வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என்று அதிரடி படங்களுக்கு மாறி வில்லன்களுடன் சண்டை போட்டார். இந்த படங்கள் காமெடி கதைகளுக்கு இணையாக வசூல் பார்க்கவில்லை. மிஸ்டர் லோக்கல் நஷ்டத்தை சந்தித்தது.
சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது முழுநீள காமெடி படம் என்று கூறப்படுகிறது.
இதுபோல் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டைரக்டு செய்யும் டாக்டர் படமும் காமெடி கதை என்று கூறப்படுகிறது. புதிய இயக்குனர்களிடமும் காமெடி கதைகள் கேட்டு வருகிறார்.