நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா மீது ஆரம்ப காலம் முதலே குற்றச்சாட்டுகளும் புகார்களும் அணிவகுத்து வந்திருக்கின்றன. அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா இந்தியாவிலிருந்து தப்பி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. ஆனால் இதற்கு ஈக்வேடார் நாடு மறுப்பு தெரிவித்திருந்தாலும் கைலாசா நாடு குறித்து தினமும் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிது. கைலாசா நாடு குறித்தும், நித்யானந்தாவை விமர்சித்தும் பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நித்யானந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “தான் வாங்கியதாக கூறப்படும் தீவு எங்கிருக்கிறது என்று தெரிவித்தால், அங்கு நிம்மதியாக செட்டில் ஆகிவிடுவேன். மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கைலாசா மிகவும் பிரபலமாகி விட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பது எனக்கு தெரியாது.
அவர்கள் சொல்லும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்று சொன்னால் அங்கு சென்று ஏதாவது ஒரு பதவியை வாங்கி நிம்மதியாக செட்டிலாகி விடுவேன். இதுக்கு மேல் நான் என்னா சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் வாங்கிய காசுக்கு மேல கூவுறாங்க“ என்று தனக்கே உரித்தான பாணியில் பேசி உள்ளார்.
இந்த நிலையில் நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.