சூழல் நட்புடன் கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் ஆட்டோக்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. கொரிய அரசின் உதவியுடன் இலங்கை பேண்தகு எரிசக்தி அதிகார சபை இதனை அறிமுகப்படுத்துவதுடன் இன்று அவ்வாறான ஆட்டோக்களை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறது.
போக்குவரத்து, சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கொரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்தே சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோக்கள் இலங்கையில் அறிமுகமாகின்றன.
இந்த ஆட்டோக்கள் தொல் எச்ச எரிபொருளை பயன்படுத்துவதில்லை. சூரிய சக்தி சட்டங்களுடன் இணைக்கப்பட்ட பாட்டரி மூலமே இவை செயற்படுத்தப்படுகின்றன. எனவே இவை சூழல் மாசு எதனையும் ஏற்படுத்துவதில்லை. சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் இப்போது உலகம் முழுவதும் ஜனரஞ்சகமாகி வருகின்றன. அதேநேரம் மேலும் பேண் தகு மற்றும் பசுமை எரிசக்தி முறைகளை நாட்டில் பேணுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.