தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சார்பில் பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (13) நடைபெற்றது.
இதற்கமைய சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ´காப்பாற்று, காப்பாற்று இலங்கை அகதிகளை காப்பாற்று, இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பாதே, குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்பெறு´ ஆகிய கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் முழக்கமிட்டனர்.
அதன் பின்னர் குடியுரிமை சட்ட திருத்த நகலை ஆர்ப்பாட்காரர்கள் கிழித்து எறிந்தனர்.
இதனை அடுத்து வீதி மறியலில் ஈடுபட்ட உதயநீதி ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இளைஞர் அணியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட உதயநீதி ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.
அத்துடன் இந்திய மத்திய அரசு புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மீள பெறும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது என இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் அண்மையில் தெரிவித்திருந்தார்.
30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என விழுப்புரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.
இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் குறித்த திருத்தச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் இன்று (13) கையெழுத்திட்டு ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இதனால் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் வெகுவிரைவில் அமல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.