தான் அளித்த கற்பழிப்பு புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த இளம்பெண், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் நகரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று 23 வயதான ஒரு இளம்பெண் வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்தார்.
உடலில் பற்றி எரிந்த தீயுடன் அவர் சூப்பிரண்டு அலுவலகத்துக்குள் நுழைந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சூப்பிரண்டு விக்ராந்த் வீர், அந்த பெண்ணை மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட ஆஸ்பத்திரிக்கு பெண் கொண்டு செல்லப்பட்டார்.
தீக்காயத்தின் அளவு அதிகமாக இருந்ததால், கான்பூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு அங்கிருந்த டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, கான்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
அந்த பெண், 4 பேர் தன்னை கூட்டாக கற்பழித்ததாக கடந்த அக்டோபர் 2-ந் தேதி ஹசன்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் முன்ஜாமீன் பெற்று விட்டனர்.
அவர்கள், அந்த பெண்ணையும், அவருடைய குடும்பத்தினரையும் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அதையும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் வேதனை அடைந்த அப்பெண் தீக்குளிக்கும் முடிவை எடுத்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
ஆனால், போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த் வீர், வேறுவிதமாக கூறினார். அவர் கூறியதாவது:-
கற்பழிப்பு புகார் கூறப்பட்ட வாலிபருடன், அந்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளாக பழக்கம் உண்டு. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் நிர்ப்பந்தம் செய்து வந்தார். அதை வாலிபர் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, அவர் உள்ளிட்ட 4 பேர் மீது அப்பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இருப்பினும், ஐகோர்ட்டில் 4 பேரும் ஜாமீன் பெற்று விட்டனர்.
தீக்குளிப்புக்கான காரணம் அறிய அந்த பெண்ணிடம் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற முயன்றார். ஆனால், அப்பெண் பேசும் நிலையில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.