இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (18) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற அரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதில் கலந்து கொண்டு தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு உரையாற்றினார்.
இந்த நாட்டின் தமிழ்த் தேசிய இனத்தின் மிகப் பிரதானமானதும் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டதுமான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனது 70 வருட நிறைவின் வழித்தட மீள்பார்வை நிகழ்ச்சியில் அதனை வழி நடத்திய தலைவர்களின் மாண்புகளும் ஆளுமையும் என்ற தலைப்பில் கருத்துரைக்குமாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.
பல தியாகங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட தீர்க்க தரிசனமுள்ள பல தலைவர்கள் இக்கட்சிக்குத் தலைமை தாங்கியுள்ளனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், என்.ஆர்.இராசவரோதயம், வைத்திய கலாநிதி ஈ.எம்.வி.நாகநாதன், எஸ்.எம்.இராசமாணிக்கம், அ.அமிர்தலிங்கம், இரா.சம்பந் தன், மாவை சோ.சேனாதிராஜா ஆகிய இவர்கள் யாவருமே அரசியல் சரித்திர புருஷர்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் பல நூல்கள் எழுதலாம். எழுதப்பட்டும் இருக்கின்றன.
எனவே எனக்குத் தரப்பட்ட குறுகிய நேர வரையறைக்குள் ஒவ்வொருவரைப் பற்றிய ஒரு சில தனித்துவ அம்சங்களை மட்டும் இங்கு முன் வைக்கிறேன்.
ஒரு சீரிய தலைவன்தான் வழி நடாத்துபவனாகவும் முன்மாதிரியான செயற்பாட்டாளனாகவும் தனது அணியின் நம்பிக்கைக்குரியவனாகவும் அதன் மீதான ஆளுமை கொண்டவனாகவும் சமகால மற்றும் எதிர்காலத்தை ஆராய்ந்து எதிர்வுகூறுக்கூடியவனாகவும் இருத்தல் வேண்டும்.
அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தந்தை செல்வா எனவும் ஈழத்துக் காந்தி எனவும் அரசியல் தீர்க்கத்தரிசி எனவும் அடையாளமிடப்பட்டவர்.
1947ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய தந்தை செல்வநாயகம் சுதந்திரத்துக்குப் பின்னரான டி.எஸ். சேனநாயக்க அரசாங்கம் கொணர்ந்த மலையக தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்ததன் பின்னணியிலயே இலங்கைத் தமிழரசுக் கட்சியை 18.12.1949 ஆம் திகதி ஸ்தாபித்தார்.
டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், கு.வன்னியசிங்கம் போன்றவர்களும் இவருடன் இணைந்து கொண்டனர்.மலையகத் தமிழ் மக்களுக்கு இன்று நடப்பது நாளை எமக்கும் நடக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் கௌரவமான வாழ்வுக்கு ஒரு சுயாட்சிக் கட்டமைப்புத் தேவை என்று கருதியதாலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.
இவ்வாறு செயற்படும்போது தாமும் தம்முடன் சம்பந்தப்பட்டோரும் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிந்தும் இந்த முடிவை தெளிவாகவும் துணிவாகவும் முன்னெடுத்தார். கட்சியின் அங்குரார்ப்பண நாளிலேயே தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை, சமஷ்டி அமைப்பு, சுயாட்சி, சுரண்டல் ஒழிந்த சோசலிஷப் பொருளாதாரம், ஒரு தமிழ் சுயாட்சி மாகாணமும் ஒரு சுயாட்சி சிங்கள மாகாணமும் இணைந்த பொதுவான மத்திய அரசாங்கம் அமைத்தல் என்ற கொள்கையை கட்சியின் இலக்காகவும் இலட்சியமாகவும் வரையறை செய்திருந்தார்.
1972 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சவால் விடுத்து தாமே தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். அவர் நினைத்திருந்தால் வேறு ஒருவரை அவ்வாறு செய்யச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. 1972 ஆம் ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமது பதவியை இராஜினாமாச் செய்யும்போது கூட மலையக தமிழ் மக்களது பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டு அதற்குப் பதிலாக சிங்கள பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டதை ஒரு முக்கிய காரணியாக குறிப்பிட்டார்.
அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் என்ற அவரது எதிர்வுகூறல் நிஜமானது காங்கேசன்துறைத் தொகுதி இடைத் தேர்தல் 06.02.1975 ஆம் திகதி நடைபெற்றது தந்தை செல்வா 16,470 அதிகப்படியான வாக்குகளினால் வெற்றி பெற்றார்.
1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5 ஆம் திகதி தனிச் சிங்களச் சட்டத்திற்கெதிராக காலி முகத்திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது தமது மகன் சந்திரகாசன் காடையர்களால் தாக்கப்பட்ட போதும் அமைதி பேணியவர். இதே போராட்டத்தில் பிற்காலத்தில் கட்சித் தலைவராக பதவி வகித்த வன்னியசிங்கம் அவர்களின் மேலாடைகள் கிழிக்கப்பட்டு தாக்கப்பட்டது. அமிர்தலிங்கம் அவர்களது தலையில் தாக்குதல் நடாத்தப்பட்டது. காயங்களுடன் இருவரும் பாராளுமன்றத்திங்குச் சென்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து வாதிட்டு வாக்களித்தனர்.
வடக்கு – கிழக்கை அரசியல் ரீதியாக முதலில் ஒன்றிணைத்தவர் தந்தை செல்வா அவர்களே. மேலும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லிம் மக்களையும் தமிழர்களோடு இணைத்து தேர்தலில் போட்டியிட வைத்து கல்முனையில் காரியப்பரையும் மூதூரில் முகமத் அலியையும் பொத்துவிலில் முஸ்தபாவையும் வெல்ல வைத்தார்.
நாட்டுக்குள்ளேயே இருந்த இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தலின் முதற்படியாக ICJ எனப்படும் International commission of jurists அமைப்புக்கு 04.09.1973 ஓர் விரிவான மகஜரைச் சமர்ப்பித்தார்.
அதேபோன்று இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்கில் கலைஞர் கருணாநிதி மற்றும் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்டோரை இந்தியா சென்று தந்தை செல்வாவும் அமரர் அமிர்தலிங்கம் அவர்களும் சந்தித்து பிரச்சினைகளை தெளிவுபடுத்தினார். பின்னர் திருமதி இந்திராகாந்தியே அமிர்தலிங்கம் அவர்களின் ஆளுமையைப் பாராட்டியமை வரலாறு. இவர்களது சந்திப்பே இந்தியா இன்னமும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கரிசனை காட்ட வித்திட்டது எனலாம்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலேயே பொலிஸ் அதிகாரிகளை எதிர்த்து நின்ற தைரியமும் வீரமும் டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதனுக்கும் அமரர் அமிர்தலிங்கத்துக்கும் இருந்தது. டாக்டர் நாகநாதனைப் பொறுத்த வரையில் சிங்களத் தலைவர் எவரையும் எதிர்த்து நிற்கும் தமது தைரியத்தை எப்பொழுதும் வெளிக்காட்டியவர்.
டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதனை பொறுத்தவரையில் அவர் ஒரு அஞ்சா நெஞ்சம் கொண்ட தலைவராவார் என்பதற்கு உதாரணம் 1961ஆம் ஆண்டு யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் போது அரசாங்க அதிபர் அவரது இல்லத்திலிருந்து வெளியேற முற்பட்ட பொழுது அந்த வாகனத்திற்கு முன்பாக குறுக்கே படுத்து அதை தடுத்தவர் இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரின் குண்டாந்தடி தாக்குதலுக்கும் உள்ளானவர்.
கட்சியின் உருவாக்க கால தலைவராக ஆறு வருடங்கள் பணியாற்றிய தந்தை செல்வா 1955 ஆம் ஆண்டு திருமலையில் நடந்த கட்சியின் மகாநாட்டில் கு.வன்னியசிங்கம் அவர்களை தலைவராக்கி தாம் பொதுச் செயலாளரானார். இதைத் தொடர்ந்து கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு மகாநாட்டிலும் கட்சியால் தெரிவு செய்யப்பட்டனர். பல கட்சிகளில் ஒரே தலைவரே தொடர்ந்து அப்பதவி வகிக்கும் நிலையில் தலைமைப் பதவியை கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு வழங்கிய பெருந்தன்மை தந்தை செல்வாவுக்கே உரியது.
திரு. வன்னியசிங்கம் தலைவராக இருந்த காலப்பகுதி இக்கட்டான ஒன்றாகும் குறிப்பாக சிங்களம் மாத்திரம் சட்டம் நிறைவேற்றல் மற்றும் 1958 இனக்கலவரம் போன்றவை இக் காலப்பகுதியில் இடம்பெற்றது. அமரர் வன்னியசிங்கம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தைரியமாக கருத்து தெரிவித்து கட்சியை வளர்த்தவர். பொதுக் கூட்டங்களில் கேள்வி பதில் மூலம் கட்சியின் கொள்கைகளை தெளிவுபடுத்திய அதேநேரம் குதத்தலான குயுத்தியான பதில்கள் மூலம் எதிர்தரப்பையும் மடக்கியவர்.
இவர் சிங்கள தேசியம் பேசிய K.M.P. இராஜரட்ணவைப் பார்த்து உமது பெயர் கோணரகே முடியான்சலாகே பொடியப்புகாமி ராஜரட்ண – நீர் கோனார் என்ற தமிழரின் பூர்விகத்தைக் கொண்டவர் எனக் கூறி அவரை வாயடைக்க வைத்தவர்.
பொருளாதார வளர்ச்சியில் அதீத அக்கறை செலுத்தியவர். அதில் ஒரு உதாரணம் இன் றும் சிறப்பாக இயங்கும் நீர்வேலி வாழைக்குலைச் சங்கமாகும்.
1958 இல் மட்டக்களப்பில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது உதவிப் பொருட்களோடு அங்கு சென்று உதவியவர்.
வன்னியசிங்கம் அவர்கள் எமது நிலம் சிங்கள குடியேற்றத்தினால் அபகரீக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் திருகோணமலை உட்பட பல பகுதிகளில் தமிழ் வர்த்தகர்களுக்கு காணிகளை வழங்குவித்து அவற்றில் விவசாயம் மேற்கொள்வதற்கான செயற்பாட்டை முன்னெடுத்தவர்.
அமரர் அமிர்தலிங்கத்தின் வாதத்திறன் பாராளுமன்ற சபாநாயகர்களாலேயே பாராட்டப் பட்டது. பேச்சாற்றலில் கட்சி வளர்த்த பெருமை அமிர்தலிங்கத்துக்கும் செல்லையா இராசதுரைக்கும் உண்டு.
பராளுமன்றம் ஶ்ரீஜெயவர்த்தனபுரத்துக்கு மாற்றப்பட்டு திறந்து வைத்த நிகழ்வில் உரையாற்றிய அமரர் அமிர்தலிங்கம் தமிழினத்தின் ஆட்சி வரலாற்றை தெளிவுபடுத்தி – வரலாற்றாளர் K.M. டிசில்வா வின் நூலில்” jaffna under the aryacakaravatles was much the most power ful kingdom in the Island’’. என்ற கருத்தை மேற்கோள்காட்டி தமிழர்களின் இறையாண் மையை வலியுறுத்தியமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இலங்கைத் தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை 1949 இல் இருந்து இன்று வரை வலியுறுத்துவதற்கு காரணமானவர்களாக தந்தை செல்வா, அமரர் அமிர்த லிங்கம் போன்றவர்கள் திகழ்கின்றார்கள்.
தலைமைகள் பகிரப்படுதல் வேண்டுமென்பதுடன் கிழக்கு மாகாணத்துக்கும் அதனுள் சேர்க்கப்படுத்தல் வேண்டுமென்பதற்காகவே சி.மு இராசமாணிக்கம் அவர்கள் இரண்டு முறை கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் ஆரம்பத்தில் ஒரு ஐக்கிய தேசிய கட்சியை பிரநிதித்துவம் படுத்தியவர் எனினும் அக்கட்சியும் சிங்களம் மாத்திரம் அரச கரும மொழி என்ற கொள்கையை முன்னெடுக்க
தீர்மானித்த பொழுது அவருடைய தமிழ் தேசிய உணர்வின்பால் உந்தப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியில் சேர்ந்தவர் ஆவார்.
திரு.சம்பந்தன் அவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014 வரை பணி யாற்றியதுடன் அந்த ஆண்டில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் திரு. மாவை சோ.சேனாதி ராஜா அவர்களை தலைவராக்கிவிட்டு தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வராக பணியாற்றி வருகின்றார். தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவராகவும் உள்ளார். ஆயுத போராட்ட காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகள் மற்றும் அபிலாசைகள் மழுங்கடிக்கப்படாமல் தொடர்ந்து முன்னெடுத்துவரும் தலை வராக இவர் விளங்குகின்றார்.
இவற்றுக்கு மேலாக சமகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங் கும் கௌவர இரா.சம்பந்தன் அவர்கள் பலரையும் இணைத்து முரண்பாடுகளுக்கு இடை யில் உடன்பாடு கண்டு இராசதந்திர ரீதியில் செயற்பட்டு வருவதையும் நாங்கள் காண் கின்றோம்.
இவருடைய செழிமையான அரசியல் சாணக்கியத்துவம் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகவும் அர்ப்பணிப்புடையவராகவும் அங்கீகரிக்கப்படுபவராகவும் விளங்குகின்றார்.
இவருடைய காலத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
கௌவர மாவை சேனாதிராசா அவர்கள் முழு வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் மக்களையும் நேராக அறிந்தவராக விளங்குகின்றார். அதனாலேயே அவர் அம்பாறை தொகுதியிலும் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் பெற்றிருந்தார். அவரை பொறுத்தவரையில் எல்லோரையும் அன்புடன் அரவணைத்து செல்கின்ற சுபாவம் கொண்டமையால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை தம்மோடு இணைத்துக்கொண்டு செயலாற்றி வருகின்றார்.
மாவை சேனாதிராஜா அவர்கள் இக்கட்டான காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி யின் பொது செயலாளராக இருந்து அதனைப் பாதுகாத்தவர் என்பது குறிப்பிடப்படவேண் டும்.
இப்படியான பல ஆளுமை மிக்க அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களின் வழிவந்த தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் அதன் தமிழனம் சார்ந்த உரிமைகள் யாவற்றிலும் பற்றுதியுடன் செயல்பட்டு தமிழ் தேசிய இனம் இந்த நாட்டில் தனது இன தனித்துவ அடையாளத்தையும் கலை, கலாசார, மொழி, சமய உரிமைகளை பாதுகாக்கக்கூடிய வகையிலான ஒரு சுயாட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் பணியாற்றி வெற்றி பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றார்.
நன்றி : -யாழ். நிருபர் பிரதீபன்-