ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை அடுத்த பெப்ரவரி மாதம் 20 திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதியரசர்கள் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
வழக்கின் சாட்சியாக பெயரிடப்பட்டுள்ள பத்து தொலைப்பேசி இலங்கங்கள் குறித்த தரவுகளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் சொலிசிட்டர் நாயகம் சுதர்சன டி சில்வா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
குறித்த தரவுகள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பதில் சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஐய்யாசாமி பாலசுப்பிரமணியம் என்பவர் அண்மையில் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட இருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்க எவரும் முன்வரவில்லை. ஆனப்படியால் அவரை மீண்டும் கைது செய்து அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப நேரிட்டதாக மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் தலைவர் சம்பத் அபேசேகர பகிரங்க நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இதன் பின்னர் வழக்கின் சாட்சி விசாரணைகளை அடுத்த பெப்ரவரி மாதம் 20 திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்த நீதிமன்றம், வழக்குக்கு தேவையான அனைத்து விடயங்களும் முழுமையடைந்துள்ளதா என்பது குறித்து ஆராய வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.