இன்றைய முக்கிய இந்திய செய்திகள் 19.12.2019 வியாழன் காலை

திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் 98-வது பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், நம் வழிகாட்டியுமான மதிப்பிற்குரிய பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு 98-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தலைவர் கலைஞரின் உற்ற தோழனாக, சமூக நீதி, சம உரிமை, மாநில சுயாட்சி போன்ற கொள்கைகளுக்கு ஊறு வந்த வேளைகளில் அரணாய் நின்று காத்திட்ட பேராசான் திராவிட கொள்கைகளின் பல்கலைகழகமாம் பேராசிரியர் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி செய்திட வாழ்த்தி வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உடல்நிலை கருத்தி கொண்டு நேரில் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

———-

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணம் செய்து திரும்பிய பின்னர் படி ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து உதவி செய்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகளை விட உயரமாக இருந்து உள்ளது இதனால் அவர் தடுக்கி விழுந்தார்.

இந்நிலையில் அந்தப் படிகட்டுகளை இடித்துவிட்டுக் சீரமைக்க உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மண்டல கமிஷனர் பாப்டே கூறுகையில் “ பிரதமர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். உயரம் சற்று உயரமாக இருக்கும். இதற்கு முன்னர் வேறு சிலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.

——–

சிவசேனாவின் நிர்வாகிகளில் ஒருவரான சேகர் ஜாதவ் இன்று காலை விக்ரோலி புறநகர் பகுதியில் தகோர் என்ற இடத்தில் சாய் மந்திர் அருகே காலை 8 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் மீட்கப்பட்டு விக்ரோலி பகுதியிலுள்ள கோத்ரெஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய நபரை அந்த பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

——-

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட மாநில முதல்வர்களும் இடம் பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

டெல்லியில் முதல்வருக்கு, தமிழக எம்.பி.க்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின், இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இரவே முதல்வர் சென்னை திரும்புகிறார்.

முன்னதாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். பிரதமருடனான சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி கோருவதற்கான மனுவை அளிப்பார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

———-

குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராகவும், ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ரஜினிகாந்த், சச்சின், சவுரவ் கங்குலி, ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்கள் இந்த விவகாரங்களில் இதுவரையில் எந்த கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை.

இந்தநிலையில், பி.சி.சி.ஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் மகள் சனா இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அதில் “இந்த முட்டாள்களின் சொர்க்கத்தில் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இல்லாததன் காரணமாக நாமெல்லாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்“ என்று எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் குறிப்பை பதிவு செய்திருந்தார்.

கங்குலி மகளின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், தயவுசெய்து இந்த எல்லா பிரச்சினைகளிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும். இந்த பதிவு உண்மையல்ல. அரசியலில் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வயது அவருக்கு இல்லை“ என்று பதிவிட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கங்குலியின் இந்த பதிவு அவர்களுக்கு மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சனாவின் தைரியத்தை பாராட்டியும் உங்களின் அரசியலுக்காக அவரின் பதிவை கொச்சப்படுத்த வேண்டாம் என்றும் கங்குலியை விமர்சித்து வருகின்றனர்.

——

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.

கிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் உள்ள ஜாபர்பாத் பகுதியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

தையடுத்து டெல்லி, அசாம், கர்நாடகா, பிஹார், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. குர்ஹான், காசியாபாத் உட்பட டெல்லியைச் சுற்றியுள்ள பிற மாநில பகுதிகளில இருந்து வாகனங்கள் உள்ளே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டை உட்பட சில இடங்களில் கடுமையான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.பாட்னா உள்ளிட்ட இடங்களில் இடதுசாரி கட்சி தொண்டர்கள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts