ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையை ராமதாஸ் காவு கொடுத்துள்ளார் என, மக்களவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பாலு இன்று (டிச.19) வெளியிட்ட அறிக்கையில், “தமிழினப் போராளி என்று, தனது நெற்றியில் தானே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக் கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழத்தமிழினத்துக்கும் சிறுபான்மையினருக்கும் இழைத்த மாபெரும் துரோகம், நாட்டு மக்கள் மத்தியில் அம்பலமான அதிர்ச்சியில், மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஏதோ, தன் வாழ்வே ஈழத்தமிழர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது போல், தன் மனதுக்குள் ஒரு கற்பனைக் கோட்டையைக் கட்டிக்கொண்டு, திமுகவையும் எங்கள் தலைவரையும் விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அடுத்தவரை விமர்சிப்பதற்கு முன்னால், தன் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லிவிட்டு விமர்சிக்க வேண்டும். விமர்சனம் செய்வதற்கான தகுதி அப்போதுதான் உண்டு.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஒரேநேரத்தில் இரட்டைத் துரோகம் செய்கிறது. அண்டை நாட்டவர் வரலாம் என்றால், முஸ்லிம்களைத் தடை செய்வது ஏன்? என்பதும், அண்டை நாடுகளின் பட்டியலில் இலங்கையைச் சேர்க்காதது ஏன்? என்பதும்தான் திமுக தலைவர் எழுப்பிய கேள்விகள்.
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாங்கள் இந்தக் கேள்வியைத்தான் எழுப்பினோம். இரண்டு அவைகளிலும் எதிர்த்து வாக்களித்தோம். மக்களவையில் பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் வென்றது அந்தச் சட்டம்.
மாநிலங்களவையில் வெற்றி பெற்றதற்குக் காரணம், அதிமுக அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது. இந்தத் துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும், ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்தான் காரணம். நாடு இன்று பற்றி எரிய இவர்களே காரணம்!
தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அந்தச் சட்டத்திருத்தத்தை ஆதரித்தார்கள் என்றால், பாமக ஆதரிக்க என்ன காரணம்?
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையைக் காவு கொடுத்துள்ளார் ராமதாஸ்.
சிபிஐ விசாரித்து வரும் வழக்கை மவுனிக்க வைக்க மவுனமாகி விட்டார்கள், இரண்டு மருத்துவர்களும்!
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் சட்ட விரோதச் செயல்களுக்கும், மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து ராமதாஸ் துணை போய்க்கொண்டு இருக்கக் காரணம், நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து அன்புமணி வாக்களித்த துரோகம் ஆகும்.
இந்தத் துரோகம் மக்கள் மன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதும், தனக்கே உரிய பொய் நாக்கால் அடுத்த பொய்யை வீசுகிறார் ராமதாஸ்.”ஈழத்தமிழர்களுக்குத் தேவை, இந்தியக் குடியுரிமை அல்ல; அவர்களுக்குத் தேவை இரட்டைக் குடியுரிமைதான்” என்று சொல்லியிருக்கிறார் ராமதாஸ்.
அவர்களுக்குத் தேவையானது இரட்டைக் குடியுரிமைதான் என்றால், அதனை நாடாளுமன்றத்தில் அன்புமணி கோரிக்கையாக வைத்தாரா?
“இந்தியக் குடியுரிமை வேண்டாம்” என்று, ஈழ அகதிகள் யாராவது இவரிடம் வந்து சொன்னார்களா?
மத்திய அரசாங்கம் இப்படி ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்ததும், பிபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த ஈழ அகதிகள், “எங்களுக்கு இந்தியக் குடியுரிமை தராவிட்டால், எங்களைக் கடலில் கொண்டு போய் தள்ளிவிடுங்கள்” என்று பேட்டி அளித்துள்ளது, ராமதாஸுக்குத் தெரியுமா?
இரண்டு நாட்களுக்கு முன்னால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஈழ அகதி மாணவர் ஒருவர், “எனக்கு இந்தியக் குடியுரிமை தராவிட்டால், கருணைக்கொலை செய்துவிடுங்கள்” என்று சொன்னதை அறிவாரா ராமதாஸ்?
“இந்தியக் குடியுரிமை அவர்களுக்குத் தேவையில்லை; நாங்கள் கேட்பது இரட்டைக்குடியுரிமை தான்” என்கிறார் ராமதாஸ். இதிலிருந்து, அவருக்கு இந்தப் பிரச்சினையே புரியவில்லை என்பது தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ்.
ஈழ அகதிகள், ஏற்கெனவே இலங்கைக் குடியுரிமை கொண்டவர்கள்தான். அவர்களுக்கு இந்தியாவும் குடியுரிமை கொடுத்தால்தான், அது இரட்டைக் குடியுரிமை ஆகும். இன்றைய மத்திய அரசு அதைத்தான் மறுத்துவிட்டது. இதுகூட புரியாமல் மிக நீளமாக வாய் வீரம் காட்டுகிறார்.
இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்றால், அதனை யார் கொண்டு வந்து கொடுப்பார்கள்?
ஒரு பிரச்சினையை, அது என்னவென்றே புரியாமல் நீட்டி முழக்கி அறிக்கை விடுவதற்கு முன்னால், நாட்டில் நடக்கும் பிரச்சினை என்ன என்ற தெளிவாவது ராமதாஸுக்கு வேண்டாமா?
“ஒரு வாழைப்பழம் இங்க இருக்கு, இன்னொரு வாழைப்பழம் எங்க?” என்றால், “அதுதான் இது” என்று காமெடி செய்து கொண்டு இருக்கிறார், தைலாபுரம் தோட்டத்து ராமதாஸ்.
2019-ம் ஆண்டு நடந்த விவகாரத்தில் ஏன் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள் என்றால், 2009-ம் ஆண்டுக்குப் போய்விட்டார் ராமதாஸ்.
பாவம், அவரது மறதி, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. 2004 முதல் 2009 வரை, மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் தங்கள் கட்சி அங்கம் வகித்ததையும், தன் மகன் அமைச்சராக இருந்ததையும் மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து வெற்றி பெற்ற போதும், அதன் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இறுதிக் காலம்வரை பதவி சுகத்தை அனுபவித்து, இரண்டு மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்குகளில் சிக்கிய போதும், ஈழத் தமிழர்களின் நலன் ராமதாஸின் கண்களுக்குத் தெரியவில்லை.
இன்றைக்கு அதே ஊழல் வழக்கு, அவரது கண்ணை மறைத்துக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், பாமகவை வன்முறைக்கட்சிக்கு உதாரணம் என்று சொன்னார் முதல்வர் ஜெயலலிதா. அவரைச் சிறை வைத்தார் ஜெயலலிதா. அந்த அதிமுக அமைச்சரவை மீது 50 ஆயிரம் கோடி மதிப்பிலான ஊழல் புகார் சொன்னார் ராமதாஸ். ‘எடப்பாடி எல்லாம் முதல்வரா?’ என்றார் அன்புமணி. தமிழ்நாட்டு அமைச்சர்கள் அனைவரையும் கடுமையாக விமர்சித்து பட்டம் கொடுத்தார் அன்புமணி.
அதே ஊழலோடு கைகுலுக்க என்ன காரணம் – ‘எவ்வளவு காரணம்’ என்று நான் சொல்ல விரும்பவில்லை; அது அந்த இரண்டு கட்சிக்காரர்களுக்கே தெரியும்! இந்த அசிங்கம் மறைக்க, நீளமான அறிக்கை வெளியிடுகிறார் ராமதாஸ்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது விடுத்த கோரிக்கைகள் எல்லாம் அநாதைகளாகக் கிடக்கின்றன. அது என்ன ஆயிற்று என்று கேட்கும் வழக்கமான துணிச்சலைக் கூட ராமதாஸ் இழந்து தத்தளித்து நிற்கிறார்.
அதை மறைக்க திமுகவையும், எங்கள் தலைவரையும் உள்நோக்கத்துடன் , ஒவ்வொரு வரியிலும் பொய் மூட்டைகளை அடுக்கியுள்ளது, ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிகிறது.
அன்புமணி ராமதாஸ் மீதான ஊழல் வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து, இப்போது டெல்லி விசாரணை நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்த ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால், பாஜக அரசின் அத்தனை தமிழக விரோதத் திட்டங்களையும், அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளையும் ராமதாஸ், ஒன்று ஆதரிக்கிறார்; இல்லை என்றால் மவுனம் காக்கிறார்.
காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தபோது பாமக எதிர்க்கவில்லை. செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியைத் திணித்த போது எதிர்க்கவில்லை.
பொருளாதார இடஒதுக்கீடு வழங்கிய போது, அதை எதிர்க்கவில்லை; கல்விக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன போது அதை எதிர்க்கவில்லை; திருவள்ளுவர் சிலைக்கு காவிச் சாயம் பூசிய போது கண்டுகொள்ளவில்லை; அதை எதிர்க்கவும் இல்லை!
இப்படியெல்லாம் பாஜக அரசின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதி காத்து விட்டு, அதே பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டு, இன்றைக்கு கடைசிக் கட்டமாக சிறுபான்மையின மக்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் குடி உரிமையைத் குழிதோண்டிப் புதைக்கும் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட்டு, திமுக மீது விமர்சனம் வைக்கும் அறிக்கையை வெளியிடுவதற்கு ராமதாஸின் மனம் நிச்சயமாகக் கூசியிருக்கும்.
ஆனால் என்ன செய்வது? அந்த அசிங்கத்தை மறைக்க திமுக மீது பாய்கிறார் பாமக நிறுவனர்.
ஏற்கெனவே, முரசொலி நிலத்தை பஞ்சமி நிலமென்று பொய் சொல்லி மாட்டிக் கொண்டு ஆதாரம் தராமல் அமுங்கிப் போய்விட்ட ராமதாஸ், நாடாளுமன்றத்தில் தனது அரசியல், சந்தி சிரித்ததை நினைத்து முதலில் வெட்கப்படட்டும். அதன்பிறகு அறிக்கைகள் விடலாம்!
ராமதாஸ் தனது அறிக்கையில், நாடாளுமன்றத்தில் நான் விடுதலைப்புலிகளை விமர்சித்ததாகப் பொய் சொல்லி இருக்கிறார். “விடுதலைப்புலிகளைத் தடை செய்வதற்காக சோனியாவுக்கு அச்சுறுத்தல் என்கிறீர்கள், சோனியாவுக்கு பாதுகாப்பை வாபஸ் வாங்கும் போது அவருக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறீர்கள். எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு?” என்று தான் நான் கேட்டேன். விடுதலைப்புலிகளை விமர்சிக்கவில்லை. பாஜக அரசின் இரட்டை வேடத்தைதான் விமர்சித்தேன். இதனை ராமதாஸ் உணர வேண்டும்.தனது விருப்பத்துக்கேற்ப எனது பேச்சை மாற்றி எழுதுவதை ராமதாஸ் நிறுத்தவேண்டும்” என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.