எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகிவிடக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனை கண்டித்து அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. டெல்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. டெல்லி ஜாமியா பலகலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டன. அதன் பின்னர் அங்கே கலவரம் ஏற்பட்டதால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
பல்கலைகழகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறன்.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.