இந்தியாவின் செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல், தனுஷ் உள்பட 8 தமிழக பிரபலங்கள் இடம்பிடித்து உள்ளனர்.
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டு தோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 2019 உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடம்பெற்று இருந்தார்.
தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
விராட் கோலி ரூ.252.72 கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் உள்ளார். அக்ஷய் குமார் ரூ.283.25 கோடி வருமானம் ஈட்டி இருந்தாலும் 2-வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து சல்மான் கான் (ரூ.229.25கோடி), அமிதாப்பச்சன் (ரூ.239.25 கோடி), மகேந்திர சிங் டோனி (ரூ.135.93) கோடி ஆகியோர் 3, 4, 5-வது இடங்களில் உள்ளனர்.
ஷாருகான் (ரூ.124.38 கோடி) 6-வது இடத்திலும் தொடர்ந்து ரன்வீர் சிங் (ரூ.118.2 கோடி), அலியா பட் (ரூ.59.21 கோடி), சச்சின் தெண்டுல்கர் (ரூ.76.96 கோடி), தீபிகா படுகோன் (ரூ.48 கோடி) ஆகியோர் உள்ளனர்.
கடந்த முறை தென்னிந்தியாவில் 15 நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை 13 பேர் இடம் பெற்று உள்ளனர்.