ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்..?
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை நேற்று (19) தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு குறித்த வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக பொலிஸார் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
——
இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
——-
சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை போன்று பிணைமுறி மோசடி தொடர்பிலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் செயற்பட்ட விதத்தின் அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவும் இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மத்திய வங்கி மோசடி தொடர்பில் தேவையான அனைத்து தகவல்களும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க விரைவில் கைது செய்யப்படுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
——-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உட்பட 6 பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
——
சமகால அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைகள் தொடர்பில் ஆராய்ந்து மறுசீரமைப்புக்கான சிபாரிசுகளை முன்வைக்க நான்கு பேர்கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்குதல், மேலதிகமாக 53,000மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குதல், மாவட்ட அடிப்படையில் காணப்படும் இஸட் ஸ்கோர் முறையை பாடசாலை அடிப்படையில் மாற்றியமைத்தல் உட்பட பல முக்கிய தீர்மானங்களை புதிய அரசாங்கம் எடுத்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைகள் தொடர்பில் ஆராயந்து நடைமுறைப்படுத்துவதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நான்கு பேர்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு ஆலோசனைத் திட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதற்காக தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியிலான வழிகாட்டியை வழங்குவதற்காக கல்வி தொடர்பான சிறப்பு செயலணி ஒன்று அமைக்கப்படுவது அத்தியாவசியமாகும்.
இதற்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு ஆலோசனைத் திட்டங்களையும் மூலோபாயங்களையும் அடையாளம் காணுதல், நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழிகாட்டிகளை வழங்குதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மீள்தரவுகளை வழங்குவதற்காக கல்வி சிறப்பு செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது என்றார்.
——–
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையை தளமாக கொண்ட சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே கோத்தாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கை வர்த்தகரீதியிலானது என்பதால் அது குறித்து மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என அவர் தெரிவித்;துள்ளார்.
எனினும் இந்த அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்;ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
—–