குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் சார்பாக இன்று நடத்தவிருந்த தர்ணா போராட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லி ராஜ்காட்டில் இன்று பிற்பகல் 2 மணி முதல் தொடர்ந்து பல மணி நேர தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போராட்டத்தை நாளை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
—–
கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ந்தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மீறி நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனால் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி எறிந்தனர். மேலும் தள்ளுவண்டிகள், டயர்கள், வாகனங்களை நடுரோட்டில் போட்டு தீவைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசினர். அத்துடன் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார்கள். மேலும் 5-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டுபட்டு காயமடைந்தனர். அத்துடன் கல்வீச்சில் 33 போலீசார் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
சட்டம்-ஒழுங்கை சீர்செய்யவும், வதந்திகள் பரவுவதை தடுக்கவும் கடந்த 19-ந்தேதி முதல் மங்களூருவில் இணையதள சேவைகள், செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.
இதனை அடுத்து கர்நாடக முதல் மந்திரி பி.எஸ். எடியூரப்பா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், முதல் மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதில் 2 பேர் பலியான விவகாரத்தில், அதற்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதேபோன்று, மங்களூரு நகரில் இன்று மாலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. எனினும் பிரிவு 144 தடை உத்தரவானது (4 பேருக்கு மேல் ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்கு தடை) அமலில் இருக்கும்.
——
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்து வருகின்றன. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் சார்பில் அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் மற்றும் கன்ஜல்வான் பிரிவுகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதே போன்று இன்று காலை 7.15 மணி அளவில் மான்கோட் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டது.
கேரி பாட்டல், சுந்தர்பானி, மென்தார், கிருஷ்ணாகாட்டி, பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த 5 இடங்களிலும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.