இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் முற்றிலும் காட்டுமிராண்டித்தனமானவை என்றும், அவை பிரிவினையை விடுத்து சகிப்புத்தன்மையையும், வெறுப்பை விடுத்து அன்பை விரும்புவோர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்றும் பிரித்தானிய வேல்ஸ் இளவரசர் சாள்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரித்தானியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்ற இம்மானுவேல் கிறிஸ்தவ கூட்டமொன்றில் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிக் கருத்து வெளியிட்ட சாள்ஸ், அவை ‘உலகெங்கிலும் உள்ள மதச்சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பிலுள்ள புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
‘உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களின் காரணமாக கொல்லப்பட்டர்களை நினைவுகூருபவர்கள் மற்றும் அத்தாக்குதல்களால் வாழ்க்கையில் பாரிய திருப்பத்தை எதிர்கொண்டவர்கள் ஆகியோருக்கான எனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவே நான் இங்கு வருகை தந்திருக்கிறேன். அன்றைய தினம் இடம்பெற்ற பயங்கரமான இழப்புக்கள் ஏப்ரல் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை இந்த நவீன யுகத்தில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பெரும் வன்முறைகள் அடங்கிய மிகமோசமான நாளாக மாற்றிவிட்டது’ என்று இளவரசர் சாள்ஸ் அவருடைய உரையில் தெரிவித்துள்ளார்
‘அச்சம்பவத்தினால் நீங்களும், கிறிஸ்தவர்களும் தாங்கிக்கொண்ட காயங்களை எந்தவொரு வார்த்தைகளைக் கொண்டும் ஆற்றிவிட முடியாது. ஆனால் நானும், இந்த நாட்டில் வாழும் மேலும் பலரும் நீங்கள் அடைந்த வேதனை தொடர்பிலும் உங்களது நலன் குறித்தும் பெரிதும் அக்கறையுடன் சிந்திக்கின்றோம் என்பதை அறியத்தர விரும்புகின்றேன். இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகெங்கிலும் உள்ள மதச்சுதந்திரத்தின் மீதும், பிரிவினையை விடுத்து சகிப்புத்தன்மையையும், வெறுப்பை விடுத்து அன்பை விரும்புவோர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.