இலங்கைக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் தீர்மானமிக்கதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் சதங்கள் குவித்து பாகிஸ்தானுக்கான டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ஒன்றை நிலைநாட்டினர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானின் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்தமை இதுவே முதல் தடவையாகும்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷுக்கு எதிராக டாக்காவில் 2007 இல் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் நான்கு வீரர்களான தினேஷ் கார்த்திக் (129), வசிம் ஜபார் (138), ராகுல் ட்ராவிட் (129), சச்சின் டெண்டுல்கார் (122 ஆ.இ.) ஆகியோர் சதம் குவித்திருந்தனர். அதன் பின்னர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்திருப்பது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும். இந்த இரண்டு சாதனைகளும் உபகண்ட அணிகளினால் நிலைநாட்டப்பட்டிருப்பது விடேச அம்சமாகும்.
போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் ஆரம்ப வீரரகளான ஷான் மசூத் (135), ஆபித் அலி (174) ஆகியோர் பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் குவித்ததுடன் இன்றைய தினம் அணித் தலைவர் அஸார் அலியும் பாபர் அஸாமும் சதம் குவித்தனர்.
அஸார அலி 16 ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்ததுடன் அணித் தலைவராக அவர் பெற்ற முதலாவது சதம் இதுவாகும். பாபர் அஸாம் நான்காவது சதத்தைப் பெற்றார்.
போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 395 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், இலங்கை பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்து மிக இலகுவாகவும் வேகமாகவும் ஓட்டங்களைக் குவித்தது. இன்றைய முதலாவது ஆட்ட நேர பகுதியில் பாகிஸ்தான் மேலதிகமாக ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 160 ஓட்டங்களைக் குவித்தது.
நான்காம் நாள் பகல்போசன இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 555 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இதன் பிரகாரம் இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதமிருக்க 475 ஓட்டங்களால் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்கின்றது.
அஸார் அலி 118 ஓட்டங்களையும் பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டில் 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மொஹமத் ரிஸ்வான் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இலங்கை பந்துவீச்சில் லஹிரு குமார 139 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லசித் எம்புல்தெனிய 193 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பறிறினர்.
வியாழனன்று ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் 191 ஓட்டங்களையும் இலங்கை முதலாவது இன்னிங்ஸில் 291 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.