எதிர்காலத்தில் தன்னுடைய கட்சியின் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் முதலாவதாக பழிவாங்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனக்கு பதவி மோகம் இல்லை எனவும் பதவிக்காகவோ அல்லது வேறு வரப்பிரசாதங்களுக்காகவோ கட்சியை பிரிக்க இடமளிக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிகளவான அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தேர்தலில் பாடுபட்ட சம்பிக்க ரணவக்க இன்று பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
——-
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றின் 2 ஆவது முன்பிணை மனுவிற்கான சத்தியக் கடதாசியை இன்று தாக்கல் செய்துள்ளார்.
இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை கடந்த 19 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் முன் பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் நிராகரிக்கப்பட்டது.
குறித்த மனு கடந்த 20 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த முன் பிணை மனுவின் ஊடாக மனுதாரர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்படவுள்ள குற்றம் தொடர்பில் துல்லியமாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படாமையினால் குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றத்திற்கு முடியாது என குறிப்பிட்டு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த மனுவின் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை வெளியிடுவதையும் நிராகரித்து தனது தீர்ப்பினை அறிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக பொலிஸார் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் முன் பிணை கோரி மனு ஒன்றை கடந்த 20 ஆம் திகதி மாலையில் தாக்கல் செய்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட 2 ஆவது முன் பிணை மனு குறித்த வழக்கு விசாரணைக்காகவே அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய சந்தர்ப்பித்தில் குறித்த சத்தியக் கடதாசியை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
——-
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பெருமளவிலான அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
குறிப்பாக வெள்ளப் பெருக்கு, மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் புனித பூமியான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
மாணிக்கக் கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.
செல்ல கதிர்காமம் கோயிலின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கதிர்காமம் முருகன் கோயிலின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
——
கட்சித் தலைமைத்துவத்தை சட்ட ரீதியாக கையளித்தால் மட்டுமே நான் அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகாரமில்லாத பதவிகள் எதுவும் எனக்குத் தேவை இல்லையெனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உங்களை பிரதமர் வேட்பாளரென பிரசாரப்படுத்தி வருகின்றது. அதனை நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா எனக் கேட்டபோதே தனது நிலைப்பாட்டை அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இரட்டை கொம்புடன் கூடிய கிரீடத்தை என் தலையில் சூட்டப்பார்க்கின்றனர். அதனை ஏற்பதற்கு நான் அந்தளவுக்கு முட்டாள் அல்ல என்பதை சொல்லி வைக்கின்றேன். என்னை பிரதமர் வேட்பாளர் எனக் கூறிவிட்டு கட்சித் தலைமைத்துவத்தை மற்றொருவரிடம் ஒப்படைத்து என்னை அதிகாரமில்லாத வாய்பேசாத பொம்மையாக வைக்கப்பார்க்கின்றனர். அதற்கு நான் ஒருபோதும் இணங்கமாட்டேன்.
பொதுத் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் போது ஐ.தே.கவின் தலைமைப்பதவியில் நான் இருந்தால் மட்டுமே பிரமர் வேட்பாளராக களமிறங்குவேன். அப்படி நடக்காதுவிட்டால் அதிகாரமில்லாத பதவிகள் எதனையுமே ஏற்கப்போவதில்லை.
தேர்தலை கட்சி பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். வேட்பாளர் தெரிவு விடயத்தில் விருப்பு, வெறுப்புகள் காட்டப்படக்கூடாது. கட்சி யாப்புக்கமைய செயற்பட வேண்டியதை நான் மறுக்கவில்லை. யாப்புப்படி நிருவாகம் தெரிவுசெய்யப்பட வேண்டும். அதற்கு செயற்குழு கூட்டப்பட வேண்டும். செயற்குழுவை உடன் கூட்டுமாறு கட்சியில் முக்கிய பலரும் கோரிக்கை விடுத்த போதும் அது இதுவரை நடக்கவில்லை. எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் செயற்குழுவின் இவ்வாண்டுக்கான பதவிக்காலம் முடிவடைகின்றது என்பதை மறந்துவிடக்கூடாது
நான் பொறுமையுடன் தான் இருக்கின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் கட்சியை பிளவுபடுத்த எவருடனும் துணை போகமாட்டேன். எனக்கு வாக்களித்த 55 இலட்சம் மக்களுக்கு பொறுப்புடையவனாக இருக்கவே உறுதிபூண்டிருக்கின்றேன். இதனை கட்சி உயர்மட்டம் புரிந்துகொள்ள வேண்டும்.
கட்சியில் ஒருவரைத் தலைவராக்கிவிட்டு என்னை பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டால் அதனை அர்த்தமற்றதாகவே கருதுகின்றேன். மற்றொரு தடவை கண்களை மூடிக்கொண்டு பயணித்து தலையை முட்டிக்கொள்ள தான் விரும்பவில்லை. எனவும் அவர் தெரிவித்தார்.