66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா விக்யான் பவனில் நடைபெற்றது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் கலந்து கொண்டார்.
விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது கூறியதாவது:-
சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றும், விழாவில் கலந்து கொள்ள முடியாத நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். ஆதி காலம் முதல் பெண்களுக்கு மரியாதை அளிப்பது தான் நமது கலாச்சாரம். அனைத்து விதங்களிலும் பெண்களை முன்னிறுத்தி போற்றி வருகிறோம்.
சினிமா துறைகளிலும் பலர் சாதனை படைத்து வருகின்றனர். நதிகள், கல்விக் கடவுள் ஆகியவற்றிற்கும் பெண்களின் பெயர்களை வைத்து வழிபடுவது நமது கலாச்சாரம். பெண்களை மதிக்க வேண்டும் என இளைய சமுதாயத்திற்கு நாம் கற்றுத்தர வேண்டும். நமது நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர்.
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. இவற்றை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். தேவை புதிய சட்டம் அல்ல. சமுதாய மாற்றம், விழிப்புணர்வு தான்.
சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சினிமா வலிமை வாய்ந்த தொலைத்தொடர்பாக விளங்குகிறது. நமது கலாச்சார வலிமை மொழிகளில் உள்ளது. மொழியும், கலாச்சாரமும் நமது கண்கள். அவற்றை நாம் பாதுகாத்து, வளர்க்க வேண்டும்.
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல, பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் வலிமை கொண்டது. இந்திய சினிமாக்கள் உலக அளவில் புகழ்பெற்றது. இந்திய கலாச்சாரம், சினிமா, உணவு ஆகியவை தான் உலக அளவில் அதிகமானவர்களை கவர்ந்து வருகிறது. கலாச்சாரம், சினிமா மற்றும் உணவு வகைகள் என மூன்று விஷயங்களுக்கு இந்தியா வெளிநாட்டினரிடையே பிரபலமானது.
இன்றைய இளைய சமூகத்தினர் துரித உணவுகளை தேடி ஓடுகிறார்கள். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதனால் பல நோய்கள் உருவாகுவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. துரித உணவு என்றாலே உடனடி மற்றும் நிலைத்த நோய் என்று அர்த்தம்.
உடல் ஆரோக்கியம் முக்கியம். யோகா உடலுக்கானது மட்டுமல்ல, மனதிற்கானதும் தான்.
யோகா உடலுக்கானது, மோடிக்கானது அல்ல.
பாகுபலி போன்ற படங்கள் இந்திய சினிமா அதீத தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன் கொண்டது என்பதை உலகிற்கு காட்டி உள்ளன. பெண்கள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு ஏற்படும் படங்கள் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் மனதை அதிகம் ஈர்க்க கூடியது சினிமா.
அதனால் மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல தகவல்களை கொண்டு சேர்ப்பதாக இருக்க வேண்டும். சமூகத்தை வடிவமைப்பதாகவும் சினிமா இருக்க வேண்டும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் இந்தியா ஒன்று தான். எந்த மதம், மொழி சார்ந்தவராக இருந்தாலும் ஒற்றுமையை கடைபிடித்து, நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும். அது தான் உண்மையான தேசப்பற்று.
பல பிரச்சினைகளில் உடனடியாக நீதி வழங்க முடியாது. அதே சமயம் நீதி தாமதிக்கவும் கூடாது. இது நமது நாடு. இதில் வன்முறை, பலாத்காரம் போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது.
ஒவ்வொருவரும் ஒழுக்கம், கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள், குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய படம் தான் உண்மையான படம் என்பது எனது கருத்து. இது சென்சார் அல்ல. நமது அறிவு சார்ந்தது. அதை இழந்து விட்டால் மக்களின் அபிமானத்தை இழந்து விடுவோம். அனைவருக்கும் சமூக அக்கறை வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.