இலங்கையில் இரண்டு மொழிகளே உள்ள போதிலும் சகோதர மொழியைப் பற்றி இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லையென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற அகில இலங்கை இரண்டாவது தேசிய மொழி போட்டியில் வெற்றியீட்டியோருக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் 21 மில்லியன் மக்கள் வாழ்கின்ற போதிலும் இரண்டு மொழிகளே பேசப்படுகின்றன. எனினும், சகோதர மொழியைப் பற்றி நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
இது தொடர்பில் வெட்கப்பட வேண்டியுள்ளது.
இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு கடந்த 72 வருடங்களாக முகங்கொடுத்து வருகின்றோம். இதற்கு அரசியல் நடைமுறையே காரணமாகும்.நாட்டின் கல்வி முறையில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வந்து இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் இரகசியம் என்னவெனில் தேசிய இனங்களாக ஒன்றிணைந்து செயற்பட்டமையாகும்.45 இலட்சத்திற்கும் மேற்பட்டுள்ள எமது மாணவர்கள் ஆற்றல் மிக்கவர்களாவர். ஆற்றல் உள்ளோர், ஆற்றலற்றோரென மாணவர்களை வகைப் படுத்தக்கூடாது.சகல மாணவர்களையும் வளமானவர்களாக வளர்த்தெடுக்க நாம் திடசங்கற்பத்துடன் செயற்பட வேண்டும்.
மொழியைப் பயன்படுத்தும் பொழுது ஏனையவர்களை புண்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது. விசேடமாக சினிமா, இலக்கியம், கலை என்பவற்றில் இதைத் தவிர்க்க வேண்டும். இதிலும் விஷேடமாக ஊடகப்பயன்பாட்டில் இது தொடர்பில் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டும்.
தெரிந்தோ தெரியாமலோ சிறுபான்மையினரை வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் ஊடகங்கள் செயற்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என்றார்.சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியையும், தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி தொடர்பாகவும் கவனம் செலுத்தி இரண்டாவது மொழியை கற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இந்த வகையில் தேசிய மொழிகள் தொடர்பான விசேட ஆற்றல்களை வெளிப்படுத்தும் மாணவர்களை பாராட்ட வருடந்தோறும் இந்த போட்டி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.