2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா தி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.
25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டதுடன் ஒவ்வொரு மாதத்தினதும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மணி முதல் 12 மணிக்கும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணையை நிராகரிப்பதற்கு போதிய அளவு காரணங்கள் இல்லாத காரணத்தினால் சந்தேக நபரான சம்பிக்க ரணவக்கவை பிணையில் விடுதலை செய்வதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.