அரசியல் பழிவாங்கல்களைப் புறந்தள்ளி நாட்டிற்கும், மக்களுக்கும் சேவையாற்றுவதற்கான தேவைப்பாடொன்று எழுந்துள்ளது. நாட்டில் நீதி, நேர்மை, அபிவிருத்தி ஆகியவற்றை செயற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்தும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அதேவேளை அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கு எதிராகவும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சி என்ற விதத்தில் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றுக்காக கைது செய்யப்பட்ட ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அவரை வரவேற்பதற்காக சிறைச்சாலை முன்றலுக்குச் சென்றிருந்த சஜித் பிரேமதாஸ, ரம்பிக்க ரணவக்கவைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.
அதன்போது அவர் மேலும் கூறியதாவது:
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான நீதிமன்றத்தினால் நியாயம் நிலைநாட்டப்பட்டதொரு நாளாக இன்றைய நாளை குறிப்பிட முடியும். எனவே நேர்மையாகவும், பக்கச்சார்பின்றியும் செயற்பட்ட நீதிமன்றத்திற்கும் அதனைச் சார்ந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றளவில் அரசியல் பழிவாங்கல்களைப் புறந்தள்ளி நாட்டிற்கும், மக்களுக்கும் சேவையாற்றுவதற்கான தேவைப்பாடொன்று எழுந்துள்ளது. நாட்டில் நீதி, நேர்மை, அபிவிருத்தி ஆகியவற்றை செயற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்தும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அதேவேளை அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கு எதிராகவும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சி என்ற விதத்தில் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
குறிப்பாக நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்துவம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்து கொண்டு மக்களை முன்நிறுத்தி செயலாற்றுவதற்கு எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது. விசேடமாக அநீதிகளாலும், சித்திரவதைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.