யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றன. அவற்றை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். புதிய ஆண்டிற்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக்க முடியும். அதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடும் 6 வாள்வெட்டுக் குழுக்கள் எம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த குழுக்களில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
யாழில் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள சிலரை கைது செய்ய வேண்டிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக வாள்வெட்டில் ஈடுபடுபவர்கள் இரண்டு விதமான வகையில் செயற்படுகின்றனர். ஒரு குழு பழிவாங்கும் நோக்குடன் இன்னொரு குழுக்களுடன் மோதலில் ஈடுபடுகின்றது.
மற்றையது போதைப் பொருள் வியாபாரிகளின் கீழ் செயற்படுகின்றது.
இந்த குழுக்களை நாம் புத்தாண்டுக்கு முன்னர் ஒழித்துவிடுவோம். அதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
——–
எமக்கு கிறிஸ்து பிறப்பு விழா ஒரு மகிழ்ச்சிகரமான விழாவாக இருக்கின்றது. அகில உலகிலும் அனைவரும் கொண்டாடும் ஒரு சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கின்றது.
ஆனால் இம்முறை நத்தாரை நோக்கும் போது மன நிறைவாக மகிழ்ச்சி அடைகின்றோம் என்று கூற இயலாத நிலையில் இருக்கின்றோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
நத்தார் வாழ்த்து செய்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
நாங்கள் இந்த வருடத்தை எடுத்துக் கொண்டால் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற்ற குண்டு வெடிப்புக்களினால் பலர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். இது எமக்கு பெரிய சோகத்தை தந்துள்ளது.
அந்த சோகம் கத்தோழிக்க மக்களுக்கு மாத்திரம் இல்லை. அந்தந்த குடும்பங்களுக்கு மாத்திரம் அல்ல. முழு உலகத்தையுமே தாக்கி இருக்கின்றது. எனவே தான் நாங்கள் இவ் வருட நத்தாரை நோக்கும் போது மன நிறைவாக மகிழ்ச்சி அடைகின்றோம் என்று கூற இயலாத நிலையில் இருக்கின்றோம். ஆயினும் இயேசு நாதர் எமக்கு நம்பிக்கையை கொண்டு வந்திருக்கின்றார். ஒரு எதிர் நோக்கை தந்திருக்கின்றார்.
அந்த மட்டில் நாங்கள் மக்களுக்கு நல்லதொரு எதிர் காலம் அமைய வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும். மற்றவர்கள் நன்றாக வாழ்வதற்கு நாங்கள் உதவ வேண்டும் என்று கருதி நாம் வாழ வேண்டும்.
எத்தனையோ பேர் உணவின்றி, உடை இன்றி தவிக்கின்றார்கள். எத்தனையோ பேர் தங்களது நாளாந்த வாழ்க்கையை கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
இந்த கால கட்டத்திலே அடை மழை பெய்து நீர் அதிகரித்ததால் வெள்ளத்தில் அகப்பட்டு எத்தனையோ மக்கள் பாடு படுகின்றனர். அவர்கள் இன்று அகதிகளாக வெவ்வேறு இடங்களில் தங்கி இருக்கின்றார்கள்.
இப்படியான ஒரு நிலையிலேயே நாங்கள் எமது தலைவராம் ஆண்டவர் இயேசு நாதரிடம் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின் போது முழு விசேடமாக மன்றாடி கேட்கக் கூடியது தான் எங்கள் மத்தியில் அமைதியையும், எங்களுக்கு ஒவ்வொரு நாளும் எல்லோறும் சிறந்த வாழ்க்கை வாழக்கூடிய ஒரு எதிர் காலத்தை பெற்றுத்தர கேட்பது.
அத்தோடு நாங்கள் அனைவரும் பாதுகாப்புடன் மற்றவர்களை அரவணைக்கும் விதத்தில் வாழ பிறந்திருக்கும் கிறிஸ்து எங்களுக்கு அருள் வளம் ஈன்றி எங்களை பலப்படுத்த வேண்டும். ஆகையினால் உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
——–
விடுதலைப் போர் மௌனித்த பின்னர், தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம். நீங்கள் வாள் எடுத்தால், நாங்கள் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னனின் கேடயங்களைத் தூக்குவோம். மீண்டும் போருக்கு எம்மை அழைக்க வேண்டாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஆண்மையில் மேர்வின் சில்வா தமிழர்களை வாள் கொண்டு துரத்துவோம் என கூறியதாகவும், அவரின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக இன்று (24) நடைபெற்ற எம்.ஜி.ஆர் நினைவு தினத்தின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் 1983 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நடைபெற்று, லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் தமிழகத்திற்குச் சென்ற போது, மறைந்த இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் அனுமதியைப் பெற்று பல உதவிகளைச் செய்தவர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் பாரிய உதவிகளைச் செய்தவர்.
ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள், தலைவர்கள் தங்கதுரை குட்டிமணி ஆகியோருக்கு இந்திய மத்திய அரசின் ஒப்புதலோடு, அமரர் இந்திராகாந்தியின் உதவியோடும், இல்லங்களை வழங்கியவர். 1987 ஆம் ஆண்டு இறக்கும் வரை, ஈழத் தமிழ் மக்களுக்காகவும், இந்திய தமிழ் மக்களுக்காகவும், உலகத் தமிழ் மக்களுக்காகவும், தமது சேவைகளை முன்னெடுத்தவர்.
ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பு அமரர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் இருந்ததைப் போன்று இல்லாது குறைவாக காணப்படுகின்றது. அதேபோன்று, தமிழக மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்க வேண்டும்.
அண்மையில், மேர்வின் சில்வா அவர்கள் வாள் எடுத்து எம்மை விரட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். அவருக்கு நாங்கள் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலைப் போராட்டத்தை மௌனித்ததென்று அறிவித்ததன் பின்னர், தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் போருக்கு அழைக்க வேண்டாம். நீங்கள் வாள் எடுத்தால், நாங்கள் எல்லாளன், சங்கிலிய மன்னனின் கேடயங்களை எடுக்க வேண்டி வரும். அதையும் மீறி நீங்கள் தாக்குதலை தொடருவீர்களாக இருந்தால், நாங்களும், பண்டாரவன்னியன், சங்கிலிய மன்னன், எல்லாள மன்னனுடைய வாள்களை எடுக்கத் தயங்கமாட்டோம். அந்த நிலமைக்கு தயவு செய்து எங்களைத் தள்ளாதீர்கள்.
இனிமேலும் இந்த நாட்டில் இரத்தகள்களரி வேண்டாம். இணைப்பாட்சி சமஸ்டியைப் பெற்று, எமது மக்கள் நின்மதியாக வாழ வைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் மக்கள் அவ்வாறு வாழ, ஈழத் தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களின் ஆதரவும் எமக்கு வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.