இன்றைய முக்கிய சினிமா செய்திகள் 25.12.2019 புதன் காலை

நடிகர் ரஜினிகாந்தை, பேட்மிண்டன் வீராங்கனை சிந்து சந்தித்தார்.

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த போது, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அப்போது தான் சிந்துவின் ரசிகனாகி விட்டேன் என்று கூறியிருந்தார். ரஜினிகாந்தின் பாராட்டால் நெகிழ்ந்து போன சிந்து அவரை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார். இந்தநிலையில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் (168-வது படம்) படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதை கேள்விப்பட்டு அங்கு சென்ற பி.வி.சிந்து, ரஜினிகாந்தை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். அப்போது உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சிந்துவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிந்து வெளியிட்டு, ‘வாவ்….மகிழ்ச்சியான தருணம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

——-

திரிஷா ஒரு மலையாள படத்தில், முதன்முதலாக மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீது ஜோசப், இந்த படத்தை இயக்குகிறார்.

ஜீது ஜோசப் இயக்கியிருக்கும் ‘தம்பி’ படம் திரைக்கு வந்துள்ள நிலையில், அவர் அடுத்து மோகன்லால்-திரிஷா நடிக்கும் மலையாள படத்தை இயக்குகிறார்.

மலையாள படத்தில், மோகன்லாலின் மனைவியாக திரிஷா நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. படப்பிடிப்பு கொச்சியில் தொடங்க இருக்கிறது.

—–

விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் ஸ்கெட்ச், சாமி-2 படங்களும் கடந்த ஜூலை மாதம் கடாரம் கொண்டான் படமும் திரைக்கு வந்தன. கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். தொடர்ந்து கமலின் கனவு படமான மருதநாயகம் படத்தில் விக்ரம் நடிப்பார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கி பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இது அவருக்கு 58-வது படம். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி வருகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த வருடம் கோடையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அமர் என்ற பெயரை வைத்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.

இந்த நிலையில் படத்துக்கு கோப்ரா என்ற பெயரை தேர்வு செய்து இருப்பதாக மீண்டும் வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. பெயரை புத்தாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related posts