குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நெருப்புடன் விளையாட வேண்டாம் என பாஜகவுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் தினந்தோறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் ராஜபஜாரில் இருந்து முல்லிக் பஜார் வரை ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசும்போது,
பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. மாணவர்களே தொடர்ந்து போராடுங்கள். நான் உங்களுக்கு துணையாக இருப்பேன். யாருக்கும் பயப்பட வேண்டாம். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை அமைதியான முறையில் போராட்டம் தொடரும். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று பாஜகவை எச்சரிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசும் மாணவர்கள் பாஜகவால் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவுக்கு எதிராக போராடும் ஜாமியா மில்லியா, ஐ.ஐ.டி. கான்பூர் மற்றும் பிற பல்கலைக்கழக மாணவர்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம் என கூறினார்.
மங்களூருவில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை திரும்ப பெற்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை குற்றம்சாட்டினார்.