96′ கதாபாத்திரம் இந்த அளவுக்குப் பிரபலமாகும் எனத் தெரியாது என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’96’. இந்தப் படமும், பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படத்துக்காக 11 விருதுகளை வென்றுள்ளார் த்ரிஷா.
சமீபத்தில் ’96’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஃபிலிம்ஃபேர் விருது வென்றார். அதனைத் தொடர்ந்து த்ரிஷா பேசும் போது, ” ’96’ படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும். அதுபோன்ற கதாபாத்திரங்களைப் படங்களில் பார்த்திருக்கிறேன்.
அதில் நான் நடித்து இந்த அளவுக்குப் பிரபலமாகும் எனத் தெரியாது. படம் வெற்றியடையும். அதில் உள்ள ராம், ஜானு கதாபாத்திரங்களுடன் ரசிகர்கள் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால், சாதாரண ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்து நடித்தது இந்த அளவுக்கு வைரலாகியுள்ளது. அவ்வளவு எளிமையான தோற்றம் அது. எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும். ஒருசில கதாபாத்திரங்கள் மேஜிக் போன்று நிகழும்.
’விண்ணைத்தாண்டி வருவாயா ’படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்குப் பிறகு ’96’ படத்தின் ஜானு கதாபாத்திரம் தான் இப்படியொரு அற்புதம் செய்தது. காதல் கதைகள் எளிதாக மக்களைச் சென்றடைகிறது என எண்ணுகிறேன்” என்று த்ரிஷா கூறியுள்ளார்.