முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான ஊடக மாநாட்டில் பங்கேற்ற இரண்டு சந்தேக நபர்களுக்கும் ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) முற்பகல் 9.50 மணியளவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது, கடந்த நவம்பர் 10ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற குறித்த சந்தேகநபர்கள் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி இரவு மஹர பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வூடகவியலாளர் சந்திபில், சந்தேகநபர்கள் தாங்களே குறித்த வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான சாரதிகள் என தெரிவித்திருந்ததோடு, தாம் இனங்காணப்பட்டால் தமக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து பொய்யான தாடியுடன் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இருவரும் அதனைத் தொடர்ந்து CIDயின் தடுப்புக் காவலில் 72 மணி நேரம் வைக்கப்பட்டதோடு, அவர்கள் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு இன்று (27) வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டிருந்தார்.